ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

மறைந்த சுதந்திர போராட்ட வீரர்  ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில்,   விதி எண் 110ன் கீழ் பமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், அக். 1-ந்தேதி  நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அதுபோல,  செப்.14ந்தேதி  ராமசாமி படையாச்சியின் பிறந்த நாளும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படையாச்சியார் பிறந்தநாளை அரசு விழாவாக  அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு 21/2கோடி வன்னியர்கள் இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வன்னிய அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

யார் இந்த  எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் ?

சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி என்ற பெயரே பின்னாளில்  எஸ். எஸ். ராமசாமி படையாட்சி என்று அழைக்கப்பட்டது. இவர் பழுத்த அரசியல் வாதி மட்டுமில்லாமல் தமிழக அமைச்சரவையிலும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

வன்னியர் இனத்தை சேர்ந்தவரான ராமசாமி படையாட்சி  1951ம் ஆண்டு  வன்னிய குல சத்திரிய சங்கம் என்ற கட்சியை தொடங்க முயற்சித்தபோது, அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி தொடங்குவது தடைபட்டது.

பின்னர்,  தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாட்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர்.  1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் ராமசாமி படையாட்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி போட்யிட்டு வெற்றி பெற்றனர்.

1952ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள்  வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர்.  அப்போதைய தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு  ராஜாஜி முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு ராமசாமி படையாட்சியின் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.

பின்னர் 1954ம் ஆண்டு  காமராஜர் தமிழக  முதல்வரானதும், ராமசாமி படையாட்சியை ஆட்சியில் சேர்த்து, அவருக்கு   உள்ளாட்சித் துறை அமைச்ச பதவி கொடுத்து கவுரவித்தார். இதன் காரணமாக ராமசாமி படையாட்சி தனது கட்சியை கலைத்துவிட்டு  1954ம் ஆண்டு  காங்கிரசுடன் இணைந்தார்.

பின்னர் காங்கிரசாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரமாக மீண்டும், 1962ம் ஆண்டு   தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கி தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த ராமசாமி படையாட்சியின் கட்சி, பின்னர் 1967ம் ஆண்டு  தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி  மேற்கொண்டார்.

ஆனால் திமுக தமிழக உழைப்பாளர் கட்சியை சேர்க்க மறுத்துவிட்டது. இதனால் வெறுப்படைந்த ராமசாமி படையாட்சி  கட்சியை மீண்டும் கலைத்து விட்டு மீண்டும்  இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார்.

பின்ன்ர காங்கிரஸ் கட்சி சார்பாக  1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணத்தை தழுவினார்.

முன்னாள் அமைச்சரான அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் என்று தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளார்.