தஞ்சை: குடிபோதையில் மனைவி, மகன்களை கொன்ற முன்னாள் எம்.எல்.ஏ. மகன்

முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற சம்பவம் தஞ்சை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அடுத்த அன்னப்பன்பேட்டை மேல தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45).  இவர் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் செல்லப்பனின் மகன்.

ஜெயக்குமாருக்கு அனிதா(40) என்ற மனைவியும், தினேஷ்(9), தரனேஷ்(7) என்ற இரு மகன்களும் உள்ளனர். குடிக்கு அடிமையான ஜெயக்குமார் மது அருந்திவிட்டு தினமும்  மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் நேற்று இரவும் மனைவியிடம்  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது   ஜெயக்குமார் மனைவி அனிதாவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

தாய் தாக்கப்படுவதை தடுக்க வந்த மகன்களையும் அவர் தாக்கியிருக்கிறார். இதில் சிறுவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிறுவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தஞ்சை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார். வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.