பெங்களூரு:

அமைச்சர் என கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் ஏமாற்றிய, கர்நாடக முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

லுங்கி கட்டியிருப்பவர், அமைச்சர் என நடித்து ஏமாற்றிய  பெங்களூரு சிவாஜி நகர் முன்னாள் எம்எல்ஏ பழனியப்பனின் மகன் கார்த்திகேயன்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் இந்திராவின் நண்பருக்கு தொழில் தொடங்க ரூ.100 கோடி கடனாக தேவைப்பட்டது. இதற்காக நண்பர் ஒருவர் மூலம் கார்த்தி மற்றும் பிரபு ஆகியோரை இந்திரா நாடியுள்ளார்.

கர்நாடக அமைச்சர் கார்த்திகேயனிடம் (கேகே ஷெட்டி என்று கூறியுள்ளனர்)பணம் கொடுத்தால், அமைச்சர் நிதியிலிருந்து கடன் பெற்றுத் தருவார் என்றும் நம்பும்படி பேசினர்.

இதனையடுத்து இந்திராவை கர்நாடக தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு அமைச்சர் அறையில் கார்த்திகேயன் அமர்ந்திருந்தார். இந்திராவுக்கு கார்த்திகேயனை அமைச்சர் என்று அறிமுகம் செய்து வைத்தனர். 5 பேர் அவருக்கு பாதுகாவலர்கள் போல் நடித்தனர்.

அவர்களது நடவடிக்கையை நம்பிய இந்திரா, ரூ.100 கோடி கடன் பெறுவதற்கான கமிஷன் தொகை ரூ. 1 கோடியே 10 லட்சத்தை தரவேண்டும் என, கர்நாடகா தலைமைச் செயலகத்தில் உள்ள ஒரு அமைச்சரின் அறையில் வைத்து பேரம் நடத்தியுள்ளனர்.

பின்னர் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் வைத்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை கார்த்திகேயனிடம் இந்திரா கொடுத்துள்ளார். முதல் கட்டமாக கரூரைச் சேர்ந்த கோயில் அறங்காவலர் பிரபுவுக்கு வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

இதன்பின்னர் கார்த்திகேயன் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் இந்திரா புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு போலீஸார், பிரபுவிடம் விசாரித்தபோது அனைத்து உண்மையும் தெரியவந்தது.

தான் அமைச்சராக இருந்ததாக பொய் சொல்லி ஏமாற்றிய கார்த்திகேயன், பெங்களூரு சிவாஜி நகர் முன்னாள் எம்எல்ஏ பழனியப்பனின் மகன் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, கார்த்திகேயன்,ஸ்வரூப், மணிகந்தா, சுமன், அபிலாஷ், கார்த்திக் ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கார்த்திகேயனை அமைச்சர் என்று நம்ப வைப்பதற்கு ஒரு அமைச்சர் அறையை லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக அந்த அரசு ஊழியரையும் தேடி வருவதாக பெங்களூர் போலீஸார் தெரிவித்தனர்.
லுங்கி கட்டியிருப்பவர் முன்னாள் அமைச்சர் என நடித்து ஏமாற்றிய முன்னாள் பெங்களூரு சிவாஜி நகர் எம்எல்ஏ பழனியப்பனின் மகன் கார்த்திகேயன்.