டில்லி

தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தடை விதிக்க முன்னாள் கடற்படை தலைவர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.   அதை ஒட்டி பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய போது அவர்களை விரட்டிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார்.   உலக நாடுகள் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுகளை ஒட்டி உத்திர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் பாஜக பல சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது.   அத்துடன் நாட்டின் பல இடங்களிலும் அபிநந்தன் புகைப்படத்துடன் பல சுவரொட்டிகளையும் பாஜக ஒட்டி உள்ளது.    கடந்த வாரம் டில்லியில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரசார பைக் பேரணியில் டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ உடையில் கலந்துக் கொண்டார்

இவை அனைத்தும் நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.   குறிப்பாக ராணுவ அதிகாரிகள் பலர் பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.   இந்திய கடற்படை முன்னாள் தலைவர் எல் ராமதாஸ் நேற்று இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ராணுவத்தினர் எப்போதும் தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது  மதத்தையோ சார்ந்தவர்கள் இல்லை என்பதில் பெருமை உடையவர்கள் என்பதை நாம் அறிவோம்.  தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள இந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனம் தேவை.

ஒரு சில அரசியல் கட்சிகள் ராணுவ நடவடிக்கைகள், புகைப்படங்கள் சீருடை ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றன.   அந்தக் கட்சிகளில் சுவரொட்டிகள் மற்றும் பானர்களில் ராணுவத்தினர் புகைப்படங்கள் இடம் பெற்று வருகின்றன.   இத்தகைய நிகழ்வுகள் ராணுவத்தினரால் ஒப்புக் கொள்ள முடியாதவைகள் ஆகும்.

இது ராணுவத்தினருக்கு இழுக்கு ஏற்படுத்துவது மட்டுமின்றி இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.  ஆகவே தேர்தல் ஆணையம் ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங்கள் மற்றும் ராணுவ சீருடைகளை எந்தக் கட்சியும் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.