கோலாஜன், அசாம் மாநிலம்

சாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் கோலாஜென் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் தேவே கவுடா பார்வை இட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் கோலாஜென் பகுதியில் அமைந்துள்ள போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திபுர்கர் நகரில் இருந்து சுமார் 17 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மீது அமைக்கப்பட்டுள்ளது.   இது திபுர்கர் மற்றும் தேமாஜி நகரங்களை இணைக்கும் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான பாலமாகும்.

அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா இந்த பாலத்தை காண நேற்று வந்திருந்தார். அவருடன் சுற்றுப்பயணம் வந்துள்ள அவர் மனைவியும் மகளும் கவுகாத்தியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றதால் இவர் மட்டும் பாலத்தை காண வந்தார். அப்போது அவர் ஏக்கத்துடன் தனது பழைய நினைவுகளை தெரிவித்துக் கொண்டார்.

தேவேகவுடா, ”நான் நகர்புறத்தை சேர்ந்தவன் இல்லை. நான் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் போக்குவரத்துக்காக தவிப்பதை நன்கு அறிவேன்.  இங்குள்ள மக்கள் என்னிடம் இங்கு ஒரு பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். நான் அப்போது இந்தியப் பிரதமராக இருந்தேன். ஆகவே உடனடியாக அவர்கள் கோரிக்கைய நிறைவேற்றி அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஆம். இந்த பாலத்துக்கு கடந்த 1997 ஆம் வருடம் நான் அடிக்கல் நாட்டினேன். நான் பிரதமராக இருந்த போது கிராமப் புற மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கும் நலத்திட்டங்கள் தீட்டுவதையே எனது முக்கிய கொள்கையாக கொண்டிருந்தேன். இந்த பாலத்தை சென்ற வருடம் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால் எனக்கு அந்த விழாவுக்கு அழைப்பு அனுப்பவில்லை. இருந்தும் நான் இந்த பாலத்தை காண ஏங்கிக் கொண்டிருந்தேன்” என தெரிவித்துள்ளார்.