ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பு

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்புடனான விருந்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்கிறார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு மத்திய அரசு சார்பாக குடியரசு தலைவர் மாளிகையில் நாளை விருந்து அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த அழைப்பை அவர் நிரகாரித்து இருக்கிறார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன் காரணமாக கடும் அதிருப்தியால் மன்மோகன் சிங் இருப்பதால், விருந்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக, வெளிநாட்டு அதிபர்கள் இந்தியா வரும் போது எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் நடைமுறை உள்ளது. ஆனால், டிரம்புக்கும், இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

ஆகவே, மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவரை போலவே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாதும் டிரம்புடனான விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

டெல்லி அரசுப் பள்ளியில் டிரம்ப் மனைவி மெலனியா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை. ஆனால் இந்த அனைத்து விவகாரங்களையும் அரசியலாக பார்க்க கூடாது என்று அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்து உள்ளது.