லிமா: ஊழல் வழக்கில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், அவருடைய சொத்துக்களை சோதனையிடவும் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

முன்னாள் அதிபரை 10 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. கைது செய்யப்படுவதற்கு முன்பாக, இவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னாள் அதிபருடன், அவருடைய செயலாளர் மற்றும் ஓட்டுநரையும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கைது உத்தரவை, ‘மிகக் கொடுமையான ஒன்று’ என வர்ணித்துள்ளார் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கி. இவர் மேலும் கூறியுள்ளதாவது, “இது எனது வாழ்க்கையின் ஒரு கடினமான நேரம். ஆனாலும், மனஉறுதியுடன் இதை எதிர்கொள்வேன். நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் ஏங்கியவன்” என்றுள்ளார்.

அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வங்கியாளராக இருந்த இவர், கடந்த 2016ம் ஆண்டு பெரு தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்.

அத்தேர்தலில் குறைந்த வாக்குகளில் வென்ற அவர், எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என அஞ்சி, கடந்தாண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

– மதுரை மாயாண்டி