டில்லி

முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவியும் 93 வயதான மூதாட்டியும் ஆன விமலா சர்மா கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவி விமலா சர்மா 93 வயதான மூதாட்டி ஆவார். கடந்த 5 ஆம் தேதி அன்று இவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால் இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   இதையொட்டி அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வயது முதிர்வு காரணமாக அவருடைய மகன் அசுதோஷ் தயாள் சர்மா மிகவும் அச்சமடைந்துள்ளார்.  அதற்கேற்றாற் போல் விமலா சர்மாவுக்கு முதல் நான்கு நாட்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.  அதன் பிறகு உடல் நிலை மெதுவாகத் தேறி உள்ளது.  முதலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்த அவர் அதன் பிறகு தானாகவே சுவாசித்தார்.

அதன் பிறகு அவர் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.  அப்போது அவருக்குப் பாதிப்பு நீங்கியது உறுதி ஆனது.  அதன் இறகு அவர் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.  டில்லியில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் விமலா சர்மா மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.