விஷம் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய முன்னாள் உளவாளி டிஸ்சார்ஜ்

லண்டன்:

ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில் 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஸ்கிர்பாலுக்கு 2010-ம் ஆண்டில் பிரிட்டன் அடைக்கலம் கொடுத்தது.

பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால் கடந்த மார்ச் 4-ம் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (வயது 33) மயங்கிய நிலையில் கிடந்தனர். அவருக்கு கொடூர விஷம் ஏறியிருந்தது தெரியவந்தது. இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் குணமடைந்தனர். இதையடுத்து யூலியா, ஸ்கிர்பால் ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் ரகசியமான இடத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.