டில்லி

ய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி சி கோஷ் முதல் லோக்பால் ஆக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது வரை அந்த பதவிகளுக்கு யாரும் மத்திய அரசால் நியமிக்கப்படவில்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொது நல வழக்கு மனுவில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்து பூஷன் ஆஜராகி வருகிறார். அவர் இந்த பதவிகளுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிக்க கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசு இந்த நியமனங்களை வேண்டுமென்றே தள்ளிப் போடுவதாக கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகும் நியமனம் நடக்காததால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் தலைமையிலான அமர்வு கடந்த 7 ஆம் தேதி இந்த பதவிகளுக்கு 15 நாட்களுக்குள் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் முதல் லோக்பாலாக நியமிக்கப்பட உள்ளார் என்னும் அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் மேலும் 8 நீதிபதிகளும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எதுவும் கடைசி நேர மாறுதல்கள் இல்லை எனில் இந்த நியமனங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.