கமதாபாத்

முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் பா ஜ க வுக்கு எதிராக குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

குஜராத் தேர்தலில் தற்போது பிரசாரம் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.   பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் குஜராத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில்  முன்னாள் ராணுவ வீரர்கள் குழு ஒன்று பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களுகாக பாஜக அரசு “ஒரு பதவி ஒரே ஊய்வூதியம்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தது.    ஆனால் அந்த திட்டத்தில் அறிவித்தபடி ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறி இருந்த பல அம்சங்களை மோடி அரசு நிறைவேற்றவில்லை எனவும் கூறி போராட்டத்தில் சிலர் ஈடு பட்டிருந்தனர்.   டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்த முன்னாள் ராணுவத்தினரை கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி டில்லி போலீஸ் வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தி உள்ளது.   அந்த சமயத்தில்  போரில் மரணமடைந்த  தியாகிகளின் மனைவிகளும் போலிசால் தாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சுதேஷ் கோயல் என்பவர், “மோடிக்கு இரண்டு முகம் உள்ளது.  ஒரு முகம் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களுக்கு தன் கையாலேயே தீபாவளி அன்று இனிப்பை ஊட்டுகிறது.  மற்றொரு முகம் போராடும் முன்னாள் ராணுவத்தினரை நவம்பர் 2 அன்று அடித்து விரட்டுகிறது.   ஆனால் இதுதான் அவருடைய உண்மையான முகம்” எனக் கூறி உள்ளார்.   தங்களின் கோரிக்கைக்கு சுமார் 910 நாட்களுக்கும் மேலாகியும் செவி சாய்க்காத மோடி அரசுக்கு எதிராக தற்போது இந்தக் குழுவில் உள்ள சில முன்னாள் ராணுவ வீரர்கள் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.