குடியுரிமை சட்டத்திருத்த போராட்டம் : முன்னாள் ஆசிரியை மீது காவல்துறை கடும் தாக்குதல்

க்னோ

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆசிரியை மீது காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.    டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி வளாகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.   கர்நாடக மாநிலம் மங்களூருவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் போராட்டம் அதிக அளவில் நடைபெறுகிறது.   அவ்வகையில் சமீபத்தில் லக்னோ நகரில் நடந்த ஒரு போராட்ட பேரணியில் முன்னாள் ஆசிரியையும் உ.பி. மாநில காங்கிரஸ் ஊடகச் செய்தி தொடர்பாளருமான சதஃப் ஜாஃபர் கலந்துக் கொண்டார்.   அந்த  பேரணியை அவர் லைவ் ஆக முகநூலில் ஒளிபரப்பு செய்துக் கொண்டிருந்தார்.

இந்த பேரணி நகரில் உள்ள பரிவர்தன் சவுக் அருகே வந்த போது சில சமூக விரோதிகள் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினர்.  அதையொட்டி சதஃப் ஜாஃபர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதுவும் முகநூலில் லைவ் வீடியோவாக ஒளிபரப்பாகி வந்தது.  அப்போது அவர் காவல்துறையினரிடம் தங்கள் பேரணியில் வந்தவர்கள் எவ்வித கலவரத்திலும் ஈடுபடவில்லை எனவும் இந்த கல்லெறி சம்பவம் திட்டமிடப்பட்ட நாடகம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் காவல்துறையினரிடம், “நீங்கள் ஏன் கல்லெறிபவர்களைத் தடுக்கவில்லை?  வன்முறை நடக்கும் போது நீங்கள் அதைக் கவனித்தபடி நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைக்கவசம் எதற்குள்ளது   நீங்கள் ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள்?: எனக் கேள்வி கேட்டது முகநூலில் வீடியோ காட்சியாக நேரடியாக ஒளிபரப்பு ஆகி உள்ளது.

அவர் தன்னை கைது செய்யும் காவலரிடம், “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? கல்லெறிந்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?” எனக் கேட்டதும் வீடியோவில் தெரிய வந்துள்ளது.    இவருடைய கைதுக்குப் பிறகு இவர் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரியாத இவர் நண்பர்களும், குடும்பத்தினரும் இது குறித்து  சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்துள்ளனர்

சதஃப் ஜாஃபரின் மருமகள், ”காவல்துறையினர் அவரை தற்போது லக்னோ சிறையில் வைத்துள்ளனர்.   அவர் காவல்துறையினரின் கடுமையான  தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்.   எனது அத்தையை காவல்துறையினர், கலவரம், கொலை முயற்சி, வெடிகுண்டு வைத்திருத்தல் உள்ளிட்ட 14 குற்றங்களில் சேர்த்துள்ளனர்.    அவரை கைகளால் அடித்தும், காலால் டேட்டி உதைத்தும் துன்புறுத்தி உள்ளனர்.

அவரை வயிற்றில் எட்டி உதைத்ததில் அவருக்கு  ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி அவருக்கு மாத விலக்கு காலம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் அடித்து உதைத்ததில் அதிக ரத்தப்போக்கு உண்டாகி இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.   அவரை நாங்கள் ஜாமீனில் வெளியே எடுத்து வந்து சிகிச்சை அளிக்க எண்ணி உள்ளோம். எங்களுக்கு இதற்கு நிறைய பேர் உதவுகின்றனர். அவர்களுக்கு எங்கள் நன்றி” எனக் கூறி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் இந்த புகார்களை மறுத்துள்ளனர். சதஃப் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று நகரில் கலவரம் விளைவித்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனச் சொன்னதால் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.   அவர் உறவினர் தெரிவிக்கும் புகார்கள் ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ளனர்.