கொல்கத்தா

முன்னாள் மேற்கு வங்க பெண் காவல்துறை அதிகாரியும் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவருமான பாரதி கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநில பெண் காவல்துறை அதிகாரி பாரதி கோஷ் பணி உயர்வு மூலம் ஐபிஎஸ் அதிகாரி ஆனவர். இவர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் பல முறை மம்தாவை தனது தாய் போன்றவர் என தெரிவித்து அம்மா எனவே அழைத்து வந்துள்ளார். இவர் மீது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பணம் பறித்ததாக சந்தன் மாஜி என்பவரால் புகார் பதியப்பட்டது. அதை ஒட்டி இவர் இல்லத்தில் சிஐடி காவலர்கள் சோதனை நடத்தினர்.

அவர் இல்லத்திலும் அவருடைய நெருங்கிய உறவினர் இல்லத்திலும் நடந்த சோதனைகல் நடந்தன. அப்போது பல அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாரதியின் இல்லத்தில் ஏராளமான துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பங்கள், வேலை வாய்ப்பு விண்ணபங்கள், 57 வெளிநாட்டு மது பாட்டில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டது. இதனால்  பாரதி தாம் மம்தாவுக்கு வேண்டியவர் என்பதால்   தனக்கு எதிராக சதி நடப்பதாக  குரல் தகவலை அளித்தார்.

பாரதி கோஷ் நேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மூத்த பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து விஜயவர்கியா தனது டிவிட்டரில், “மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ் அவர்களை பாஜக குடும்பத்தில் இணைந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்” என பதிந்துள்ளார்.

ஏற்கனவே சாரதா சிட்பண்டு ஊழலில் தொடர்புள்ளதாக கூறப்படும் முகுல் ராய் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.