நீட்: குமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம்  

சென்னை:

நீட் தேர்வு எழுத கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் 2 தினங்களுக்கு முன்பு அத்தீர்ப்புக்கு தடை விதித்தது.

இதனால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.  ரயில்களில் முன்பதிவு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். தமிழகத்துக்குள்ளேயும் வேறு வேறு இடங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு காலை 7.30 மணிக்கு ஒரு பிரிவும், 8.30 மணிக்கு ஒரு பிரிவும் அனுமதிக்கப்படுகின்றனர். 3 மணி நேரம் தேர்வு எழுதவுள்ள நிலையில் 3 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். சில தேர்வு மையங்களில் ஆதார் கார்டு கேட்டதாகவும் அது முக்கியமல்ல என விதிகளில் கூறப்பட்டுள்ளதாக பெற்றோர் வாக்குவாதம் செய்தவுடன் ஆதார் கார்டுகளை கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.