சென்னை: இந்த 2020ம் ஆண்டில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, 2000 மருத்துவர்கள் உட்பட, மொத்தமாக 5000 மருத்துவப் பணியாளர்களைத் தேர்வுசெய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சேவைத் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வுகளின் மூலமாக நிரப்புவதற்காக கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்.

இதன்மூலமாக இதுவரை 30000 மருத்துவப் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள மருத்துவப் பணியாளர் நியமனத்திற்கான தேர்வு குறித்த விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், உதவி மருத்துவர்கள், சித்தா உதவி மருத்துவ அதிகாரி ஆகியோரை நியமனம் செய்வதற்கான தேர்வு அறிவிப்பு பிப்ரவரியிலும், ஓமியோபதி, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட உதவி மருத்துவ அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சிலும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குறித்து விரிவான விபரங்களை அறிய www.mrb.tn.gov.in என்ற வலைதளம் செல்லவும்.