நீதிபதிகள் பதவிக்கு தேர்வு: நிதி ஆயோக் பரிந்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

நீதிபதிகள் பதவிக்கு தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்பட வேண்டும் என்று  நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது மத்திய அரசின்  உச்சகட்ட ஆணவம் என தெரிவித்துள்ளார்.

நிதி அயோக் அமைப்பு பல வகையான பரிந்துரைகளை அறிவித்து உள்ளது. அதில்,  கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், அந்த தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல  பரிந்துரைகளை நிதி ஆயோக்  வழங்கியுள்ளது.

மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் என்னும் குடிமைப்பணிகளில் சேருவதற்கு பொதுப்பிரிவினருக்கு தற்போது வயது உச்சவரம்பு 30 ஆக உள்ளது. இந்த உச்சவரம்பை 27 ஆக குறைக்க வேண்டும். இதை 2022-23 ஆண்டுக்குள் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூறி உள்ளது.

நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.

அதில், “மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை – ‘மாநில அரசுகளே தேவையில்லை’ என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.

மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இது போன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து – தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.