சென்னை:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  வரும் 15ம் தேதி (ஏப்ரல் 15) முதல்  இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நீட் தேர்வு மூலமே நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு வரை நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய நிலையில், தற்போது தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பம்  கடந்த ஆண்டு (2018)  நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீட் ஆன்லைனில் பெறப்பட்டது.

இதற்கிடையே 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 7ம் தேதி நீட்டிக்கப்பட்டது.

எதிர்வரும் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும்  15.19 லட்சம் மாணவ மாணவிகள்  விண்ணப்பம் செய்து உள்ளனர். ‘

தமிழக மாணவர்கள் மட்டும் 1.40 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

நீட் தேர்வு மே 5ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் வரும் 15ம் தேதி முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு என்டிஏ தெரிவித்து உள்ளது.