11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மொழித் தேர்வு முறை மாற்றம்

சென்னை

மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ளதை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஒன்றாக சேர்க்க தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டம் இட்டுள்ளது.

தற்போது தமிழ் போன்ற மொழிப்பாடங்களில் தாள் ஒன்று, தாள் இரண்டு என இரு தேர்வுகள் நடத்தப் படுகின்றன.  இதனால் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 7 தேர்வுகள் எழுதுகின்றனர்.   அதே போல் 11 மற்றும் 12 வகுப்புகளில் 8 தேர்வுகள் எழுதுகின்றனர்.   இதனால் மாணவர்களுக்கு கல்விச் சுமை அதிகமாவதாக கூறப்பட்டது.

இதை மாற்ற இனி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மொழித் தேர்வு ஒரே தாளாக மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.   அத்துடன் இல்லாமல் வணிகவியலையும் கணக்கு பதிவியலையும் ஒரே தேர்வாக மாற்றவும் ஆலோசித்து வருகிறது.    மொத்தத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்களில் முக்கிய பாடத் தேர்வுகளை 3 ஆக குறைக்க அரசு ஆலோசித்துள்ளது.

இது போல தேர்வுகளை குறைக்கும் ஆலோசனைக் கூட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு வர மத்திய அரசும் ஆலோசித்துள்ளது.