டில்லி:

மத்திய உதவி நுண்ணறிவு அலுவலர் பணிக்கு (கிரேடு 2) ஆயிரத்து 300 பேரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை மத்திய உளவு அமைப்பான ஐபி கடந்த ஆகஸ்டு மாதம் ஆன்லைனில் வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் 33 நகரங்களில் நடந்தது. இதில் 7.5 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

இந்த எழுத்து தேர்வில் பல முறைகேடுகளும், விதிமீறல்களும் நடந்ததாக தேர்வு எழுதியவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் மூலம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய நுகர்வோர் புகார் அமைப்பின் கவனத்துக்கு இந்த புகார்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

‘‘இந்த தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கேள்வி தாள் சுய உதவி இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள இந்த வெப்சைட்களில் உள்ள மாதிரி கேள்வி தாளை அப்படியே காப்பி அடிக்கப்பட்டு இந்த எழுத்து தேர்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேள்வித் தாள் தயாரித்தவர்கள் வெப்சைட்டில் உள்ள வரிசை எண்களை கூட மாற்றாமல் அப்படியே தயாரித்துள்ளனர்’’ என்று புகார் கூறப்பட்டுள்ளது.

‘‘பல தேர்வு மையங்களில் கேள்வித் தாள்கள் சீல் வைக்கப்படாமல் இருந்தது. கேள்வித் தாள் பூர்த்தி அடையாமல் தவறுவதலாக தயார் செய்யப்பட்டுள்ளது. சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மெ £பைல் போன் வைத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரி வர மேற்கொள்ளப்படவில்லை’’ என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ஐபி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘60 நிமிடத்தில் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் குவிந்திருந்ததால் கேள்விகள் கடுமையாக வடிவமைக்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் காலை 9.58 மணிக்கு தேர்வு எழுதும் இரு நபர்கள் கையெழுத்திட்டு கேள்வி தாள் திறக்கப்பட்டது’’ என்றார்.

இது தொடர்பாக உள்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘‘அச்சு பிழை காரணமாக 2, 24, 25,78ம் கேள்விகள் தவறாக வந்துள்ளது. இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இதர கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்டத்திற்காக தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.