ஐதராபாத்:

தெலங்கானாவில் கடந்த 4ம் தேதி போதை பொருள் கடத்தல் வழக்கு வெடித்தது. இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் போதை பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர்கள் 6 பேர் உள்பட 12 திரையுலகத்திற்கு தெலங்கானா அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 19 மற்றும் 27ம் தேதிகளில் எஸ்ஐடி அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகுமாறு அமலாக்க துறை அ ந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. முன்னணி தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத், முன்னணி நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தருண்குமார், தனிஷ், சுப்பராஜூ, நடிகைகள் சார்மி கவுர், துணை நடிகைகள் முமைத் கான், சினிமாட்டோகிராபர் சியாம் கே நாயுடு, பாடகர் ஆனந்த கிருஷ்ணா நந்து, ஆர்ட் டைரக்டர் சின்னா என் தர்மாராவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்க துறை இயக்குர் அகுன் சபர்வால் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசாமிகளிடம் இருந்து தெலுங்கு திரையுலகினரின் மொபைல் போன் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் கல்வின் மாஸ்கரனாஸ் என்ற பிரபல போதை கடத்தல் மன்னனிடம் இவர்களது போன் நம்பர்கள் இருந்துள்ளது.

இவன் உள்பட இவனது கூட்டாளிகள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதை கடத்தல் கும்பலுக்கு பின்னால் பல பிரபலங்கள் இருந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னதாக 29 வயதாகும் இந்திய&அமெரிக்கா வான்வெளி நாசா பொறியாளர் ஒருவர் ஐதராபாத்தில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவருடன் ரிச்சுவல் அகர்வால் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்தே அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகர்கள், திரையுலகத்தினருக்கு தொடர்பு இருப்பது கண்டு தெலுங்கு திரைத்துறை அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.