தொடரும் குழப்பம்: நவ.14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் காரணமா இலங்கை நாடாளு மன்றம் 5ந்தேதி கூடுவதாக ஒரு தரப்பினரும், 7ந்தேதி கூடுவதாக மற்றொரு தரப்பினரும் கூறி வந்த வேளையில், நவம்பர் 14ந்தேதி நாடாளுமன்றம் கூடுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்து உள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமர்  ரணிலுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதிபர் சிறிசேனாவின் எதிரியான  முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் நியமனம் செய்தார். இதன் காரணமாக அங்கு உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் நானே பிரதமர் என்று கூறி வருகிறார். இது தொடர்பாக உடடினயாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க அரசியல் கட்சிகள் கோரி வந்தனர்.

இந்த நிலையில் வரும்  வரும் 16ந்தேதி வரை  நாடாளுமன்றத்தை  அதிபர் சிறிசேனா முடக்கினார். அதிபரின் செயலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதன் காரணமாக வரும் 5ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட வாய்ப்பு இருப்பதாக தற்போதைய புதிய பிரதமர்   ராஜபக்சே கூறியிருந்த நிலையில்,  நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் கூறி இருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் 14ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்து உள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்த பட்சம் 113 எம்பிகளின் ஆதரவு தேவை. ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆட்சியமைக்க ஆரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதும் ரணிலுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாக அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்பிக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்களிக்க உள்ளனர். இதன் காரணமாக தற்போது ரணிலுக்கே பெரும்பான்மை உள்ளது.

அதேவேளையில், தற்போதைய பிரதமர் ராஜபக்சேவுக்கு ஸ்ரீலங்காமக்கள் சுதந்திர கட்சியின் எம்பிகள் உள்ளிட்ட 105 எம்பிகள் வாக்களிக்க உள்ளனர்.  அவர் வெற்றி பெற மேலும் 9 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.  இதன் காரணமாக அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ராஜபக்சே தரப்பு வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துத் விதமாக  ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க கோரும் ஆடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், ராஜபக்சேவுக்கு  ஆதரவாக  வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாகவும், ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்பி திசநாயகே, ஐக்கிய தேசிய கட்சி எம்பி பலித ரங்கே பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

மேலும்,  ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்த மேலும் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், ஆர்.டி.அசோக பிரியந்த பிரதி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தை முடக்கியதன் மூலம் ராஜபக்சே ஆதரவை திரட்ட அதிபர் சிறிசேனா உதவி புரிவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், லங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் சிறிசேனாவின் செயலாளர் உதய சேனவிரத்னே அறிவித்துள்ளார்.