இலங்கை குழப்பம்: தமிழ்கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரன் ராஜபக்சே அணிக்கு தாவல்
கொழும்பு:
ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அறிவித்திருந்த நிலையில், ஒருசில தமிழ் எம்.பி.க்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாறி உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த மட்டக்கப்பு பாராளுமன்ற தமிழ் எம்.பி. வியாழேந்திரன் ராஜபக்சேவை சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டினார். அவருக்கு உடடினயாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முடிவு செய்திருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது ரணில் மற்றும் ராஜபக்சே ஆகிய இருவருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றி ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே இருந்த இலங்கை நாடாளுமன்றத்தில், ரணிலுக்கு அதிக அளவிலான எம்.பி.க்கள் ஆதரவு இருந்து வருகிறது. இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கப்போவது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 எம்.பிக்கள்தான் என்ற நிலையில், தமிழ் எம்.பி.க்களை இழுக்க அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்தால், அமைச்சர் பதவி என ஆசை காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் கூட்டமைப்பில் இருந்து வியாழந்திரன் ‘ வெளியேறி ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவருக்கு உடடினயாக அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வியாழன் ராஜேந்திரன், தமிழ்கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்காமல், முடிந்தால் நடுநிலை வகித்து காட்டட்டும், அவ்வாறு நடுநிலை வகித்தால் தானும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மாட்டேன்… நடுநிலை வகிப்பேன் என்றும், அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என்றும் கூறி உள்ளார்.
கடந்த காலங்களில் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. இந்த நிலையிலேயே, ஜனாதிபதியிடம் 11 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.
இதில், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் உள்ளடங்குகின்றன.
தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவைகள் தீர்க்கப்படவில்லை. இந்நிலையிலேயே கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.
தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவான கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
தனக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.
மேலும், தமிழ் மக்களை ஏமாற்றும் செயலிலேயே கூட்டமைப்பு ஈடுப்படுகிறது எனவும் குற்றம் கூறினார்.