இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம்: 7ந்தேதி இலங்கை பாராளுமன்றம் கூடுவதாக சபாநாயகர் தகவல்

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே வரும் 5ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியிருந்த நிலையில், தற்போது, நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் கூறி உள்ளார்.

இதன் காரணமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள இலங்கை  நாடாளுமன்றம் மீண்டும் கூடுவது தொடர்பாக குழப்பம் நீடித்து வருகிறது.

இலங்கையில் அதிபருக்கும் , பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நிர்வாகம் ஸ்தம்பித்து வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ரணில் இந்தியா வந்து பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து சென்றார்.

அதைத்தொடர்ந்து, அதிரடியாக ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதிபர் சிறிசேனாவின் எதிரியான  முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார்.

இது இலங்கையில் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால்,  அரசியல் சட்டப்படி தன்னை நீக்க முடியாது என்று கூறிய ரணில், நானே பிரதமர் என்று கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற சபாநாயகரும் குரல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16ந்தேதி  முடக்கி அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை அதிபரின் இந்த செயலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில்  புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட  ராஜபக்சே, வரும்  5ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாiவ  ரணில் விக்ரம சிங்க ஆதரவு கட்சியினருடன் சந்தித்து பேசினர். அப்போது இலங்கை  நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என வற்புறுத்தினர்.

இதைத்தொடர்ந்து இலங்கை எம்.பி.க்கள் மத்தியில்  பேசிய சபாநாயகர் கரு ஜெயசூர்யா, வரும் 7ந்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே அதிபர் சிறிசேனாவுடன் பேசியிருப்பதாவும், இதற்கான அறிவிப்பானை நாளை வெளியிடப்பட லாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.

ஏற்கனவே ராஜபக்சே 5ந்தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்துள்ள நிலையில், சபாநாய கர் கரு.ஜெயசூர்யா 7ந்தேதி கூடும் என்று கூறி உள்ளார். இதன் காரணமாக இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

ஏற்கனவே இருந்த இலங்கை நாடாளுமன்றத்தில், ரணிலுக்கு அதிக அளவிலான எம்.பி.க்கள்  ஆதரவு நிலவி வந்த நிலையில், அவரது ஆதரவாளர்களை இழுக்க அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.