எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்!: பிரபல எழுத்தாளர் பேட்டி

எந்திரன் படம் வெளியான போதே, “இயக்குநர் ஷங்கர் என் கதையைத் திருடிவிட்டார்” என்று புகார் தெரிவித்தார் பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் எந்திரன் படத்தின் இரண்டாம்பாகமாக, 2.o படத்தை ஷங்கர் இயக்கியிருக்கும் நிலையில், இந்தக் கதையும் தன்னிடமிருந்து திருடப்பட்டது என்று புகார் தெரிவிக்கிறார்.

இது குறித்து அவரிடம் பேசினோம். அதற்கு முன் அவரைப்பற்றி சுருக்கமாக..

கடந்த 34 ஆண்டுகள் எழுதவரும் ஆர்னிகா நாசர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்ப சிறுகதைகள்  நூற்றுக்கும் மேற்பட்ட ட விஞ்ஞான சிறுகதைகள் நாநூறுக்கும் மேமற்பட்ட திருக்குர்ஆன் நீதிக்கதைகள்  நாற்பது தொடர் கதைகள் நூற்றைம்பது நாவல்கள்  என எழுதிக்குவித்திருக்கிறார்.

இதோ அவரிடம் நமது கேள்விகள்…

ஆர்னிகா நாசர்

“உங்களுக்கு எழுத்தார்வம் எப்படி ஏற்பட்டது?”

“1981-82ல் திண்டுக்கல்லில் “ஆர்னிகா’ எனும் கையெழுத்துப் பத்தரிகை நடத்தினேன்.  பின் கையெழுத்து பத்திரிகை அச்சுப் பத்திரிகை ஆனது. எட்டு மாதங்களுக்குப் பிறகு எனக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் பணி கிடைத்தது. 24.01.1983 அன்று பணி பணியில் சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தில் மீண்டும் “ஆர்னிகா” கையெழுத்து பிரதி நடத்தினேன்.   நல்ல வரவேற்பு.

நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில், பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன்.

எனது முதல் சிறுகதையான “முதல்வகுப்பு டிக்கெட்’ டிசம்பர் 1984 குங்குமம் இதழில் பிரசுரமானது. தொடர்ந்து 34 ஆண்டுகள் எழுத்துப்பணியில் ஆயிரத்தை தாண்டும் குடும்ப சிறுகதைகள் 100க்கு மேற்பட்ட விஞ்ஞான சிறுகதைகள் 400க்கும் மேமற்பட்ட திருக்குர்ஆன் நீதிக்கதைகள் 40 தொடர் கதைகள் 150 நாவல்கள் எழுதி முடித்துள்ளேன்.”

“அறிவியல் கதைகளை எழுதுவதில் புகழ் பெற்றவர் நீங்கள். இந்த எண்ணம் எப்படித்தோன்றியது?”

”நான் எழுத ஆரம்பிக்கும் போபாது ராஜேஷ்குமாரிலிருந்து வேறுபட்ட க்ரைம் துப்பறியும் கதைகள் எழுதவேண்டும் என குறிக்கோள் கொண்டேன். சுஜாதா மரபு சார்ந்த விஞ்ஞான சிறுகதைகள் எழுதிக்  கொண்டிருந்தார். நான் இந்தியாவிலேயே முதன்முறையாக “பாவனை விஞ்ஞானக்கதைகள்’ (pseudo science fiction) எழுத் துணிந்தேன்.  விஞ்ஞான உண்மைகள் மாறுதலுக்கு உட்பட்டவை. விஞ்ஞானத்திற்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மனிதன் எதனை கற்பனை காண்கிறானோ  அது விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆகிறது. “உண்மை பொய் ஆகலாம். பொய்  உண்மை ஆகலாம்’ – இதுதான் பாவனை விஞ்ஞான கதைகளின் அடிப்படை. நான் எழுதிய பாவனை விஞ்ஞானக்கதைகள் வாசகரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. எல்லாமே நம்பமுடியாத நூறு  வருடங்களானாலும் நடக்க முடியாத கதைகள். பாவனை விஞ்ஞானகதைகள் எனக்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தன.

எழுத்தாளர் சுஜாதாவே என்னுடைய பாவனை விஞ்ஞானக்கதைகளை பாராட்டி இருக்கிறார்.”

பட்சிராஜன் – ரிச்சர்ட்

“உங்களது எந்த கதையை ஷங்கர் எடுத்துவிட்டார் என்று கூறுகிறீர்கள்?“

”நான் எழுதிய பாவனை விஞ்ஞான சிறுகதைகளில் ஒன்றுதான், ”பற’என்பது.  இச்சிறுகதை 1996 ஆம் ஆண்டு மே மாத மாலைமதியில் வெளியானது.  இக்கதையில் வரும் ரிச்சர்ட் என்கிற  பறவைமனிதன் கதாபாத்திரத்தை திருடித்தான்  இயக்குநர் ஷங்கர் தனது 2.0 படத்தில் அக்சய்குமார் கதாபாத்தித்துக்கு பயன்படுத்தியுள்ளார்.”

சலீம்அலி – பட்சிராஜன் (அக்சய்குமார்)

அந்த கதாபாத்திரத்துக்கு பறவைகளின் காதலர்  சலீம் அலிதான் இன்ஸ்ப்ரேசன் என்றும், அவரைப்போன்ற உருவத்துடன்தான் 2.o படத்தில்  பட்சிராஜன் என்கிற அக்சய்குமார் கதாபாத்திரம் படைக்கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே..

சலீம் அலி இன்ஸ்ப்ரேஷனாக இருக்கலாம். ஆனால் பறவை மனிதன்.. அதாவது பறக்கும் மனிதன் என்பதுதான் அந்த கதாபாத்திரத்தின் மையப்புள்ளி.  அது எனது கதையில் இருந்து திருடப்பட்டது.

“அதற்கு முன்பு ஒரு கேள்வி.. இயக்குநர் ஷங்கருடனான உங்கள் சந்திப்பு குறித்து…. 

“சொல்கிறேன்..  1992ஆம் ஆண்டு மணிமேமகலை பிரசுரம் எனது 18 தொகுப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட்டது. வெளியீட்டு விழாவில் சிறப்புரை வழங்க எழுத்தாளர் பாலகுமாரனிடம் கேட்க வேண்டி கோயம்புத்துர் சென்றேன். அங்குதான் அப்போது அவர் ஒரு ஓட்டலில் தங்கி ஒரு படத்துக்கான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். நான் சென்ற நேரத்தில் பாலகுமாரனின் அறைக்கு வெளியே ஒரு ஓடிசாலான வாலிபர் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தார். பாலகுமாரன் தியானத்தில் இருப்பதாகவும் அவருக்காகதான் தான் காத்திருப்பதாகவும் அந்த வாலிபர் கூறினார்.

பிறகு அறைக்குள் சென்று, பாலகுமாரனிடம் பேசினேன். தன்னால் நூல் வெளியீட்டு விழாவுக்கு வர இயலாது என்ற பாலகுமாரன், நூல் வெளியீட்டு  விழாவுக்கு வாழ்த்துளையும் தெரிவித்தார்.

பிறகு பேசும்போதுதான்,  ஜென்டில்மேன் படத்துக்கு கதை விவாதம் நடப்பதும் வெளியில் நிற்பவர் டைரக்டர் ஷங்கர் என்பதும் தெரிந்தது. இது ஷங்கருடனான முதல் சந்திப்பு.

பாலகுமாரன்

“ஷங்கருடன் இணைந்து பணிபுரிய நீங்கள் விரும்பியதாக ஒரு தகவல் அப்போது உலவியது. உண்மைதானா?”

”சொல்கிறேன். அவரது ஜென்டில்மேன் படத்தின் உருவாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவருடன் இணைந்து பணிபுரிய விரும்பினேன்.  அவருடனான இரண்டாவது சந்திப்பு அதற்காகத்தான் நடந்தது. அப்போது   ஷங்கர் தனது “காதலன்’ பட ஷூட்டிங்குக்காக சிதம்பரம் வந்திருந்தார். ஓட்டல் சாரதாராமில் தங்கியிருந்தார். அவரை பார்க்க நானும் எனது நண்பர் மனோகரனும் சென்றோம்.  ஷங்கரிடம் என்னுடைய “பாதரச  நிலவில் மரணப்புயல்’ என்ற நாவலை கொடுத்தேன்.  அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தேன். 

அதற்கு அவர், “முதல் பட வெற்றியையை அடுத்து இரண்டாவது படம்தான் இயக்குநருக்கு முக்கியம்.  ஆகவே ஜென்டில்மேன் படத்துக்குப் பிறகான இந்த “காதலன்” படம் எனக்கு வாழ்வா சாவா படம்” என்றார். மேலும், பாலகுமாரன் சொன்னால் என்னை தன்னுடன்  இணைத்துக்கொள்வதாக தெரிவித்தார். இது குறித்து பாலகுமாரனிடம் பேசனேன்.  பாலகுமாரன் ஷங்கரிடம் என்ன சொன்னார் என எனக்கு தெரியவில்லை. நான் விரும்பிய இணைப்பு நடக்கவில்லை. அதன்பின் நான் ஷங்கரை சந்திக்கவில்லை.

“ஷங்கர் எடுத்த எந்திரன் படமும் உங்கள் கதை என்றீர்களே..!”

“ஆமாம்..   ஷங்கருடன் நான் இணைந்து பணிபுரியும்  சூழல் ஏற்படாவிட்டாலும் எனது கதைகளை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார் என அனுமானிக்கிறேன்.

13.07.1995 ல் நான் மாலைமதியில் “ரோபாட் தொழிற்சாலை’ எனும் விஞ்ஞான நாவல் எழுதினேன். அதனை திருடிதான் ஷங்கர் “எந்திரன்’ படமெடுத்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறேன். அவ்வழக்கின் எந்த வாய்தாவுக்கும் ஷங்கர் வருவதே இல்லை. பணமும் புகழும் மிதமிஞ்சி இருப்பதால் மமதை ஷங்கருக்கு”

“எந்திரன்’ படக்கதை தனது கதை என்று கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளரும் வழக்கு போட்டிக்கிறாரே!”

“உண்மைதான். ஆனால்  ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறுகதை எனது “ரோபாட் தொழிற்சாலைக்கு பின்தான் வந்தது.”

பட்சிராஜன் (அக்சய்குமார்) -ஷங்கர்

“ஆனாலும் ஷங்கர் மிகப்பெரிய இயக்குநர் என்று பெயரெடுத்துவிட்டார். எழுத்தாளர்கள் சொல் அம்பலத்தில் ஏறுமா?”

”அது தமிழ் எழுத்துலகின்.. திரையுலகின் சாபக்கேடு. அதே நேரம் ஷங்கர் பற்றி நான் சொல்ல வேண்டும்..

அவர் இதுவரை எடுத்த படங்கள் 12. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்தியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன், 2.0 ஆகியவை.

ஜென்டில்மேன் மலைக்கள்ளன் அல்லது ராபின் ஹீட் தழுவல். முதல்வன் இந்தியன் அந்நியன் சிவாஜி – ஒரே கதை அமைப்புள்ள படங்கள் ஒரே  தீம். பாய்ஸூ ஐயும்  அட்டர்பிளாப். நண்பன் த்ரி இடியட்ஸ் இந்திப்படத்தின் ரீமேக். எந்திரனும் 2.0ம் சயின்ஸ் பிக்சன்.

சமூகக்கதைகளை யார் வேவண்டுமானாலும் எழுதலாம். ஆனால் விஞ்ஞான கதைகளை எழுத விஞ்ஞான மனோபாவம், தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் எழுதி குவித்த அனுபவம் தேவை. இயக்குநர் ஷங்கர் இயக்குநராவதற்கு முன் எழுத்தாளராக இருந்தவர் அல்ல. எந்திரனுக்கு முன்னும் பின்னும் புதிதாய்  ஒரு விஞ்ஞானக் கதையும் யோசித்தவர் அல்ல.

பாலகுமாரனின் முதுகிலும் சுஜாதா முதுகிலும்  சவாரி  செய்து வெற்றி பெற்றவர். ஐ படத்துக்கு கூட எழுத்தாளர் சுபாவின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.   2.0 படத்துக்கு வசனம் எழுத மலையாளம் கலந்த தமிழ் எழுதும் ஜெயமோகன் கிடைத்தார். இதிலிருந்தே ஷங்கர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். ஆனால் சொந்தமாய் தனது படங்களுக்கு கதை வசனம் யோசிக்கத் தெரிந்தவர் அல்ல என்பதை உணர முடியும்!”

 “ஐஸ்வர்யா திருடிய கதை.. கண்டுகொள்ளாத ரஜினி!”: . ஆர்னிகா நாசரின் பேட்டி இரண்டாம் பாகம்:

https://patrikai.com/exclusive-2-o-controversy-shankar-has-stolen-my-story-famous-writer-arnika-nasser-complaint/?fbclid=IwAR3jkha1DEZGuHQgZdqFK3E4LKhUjYpzs6u4rcl7rapFR-OxM1Us3ems1b8

 

 

 

கார்ட்டூன் கேலரி