எக்ஸ்ளூசிவ்: ஒரு செய்தித்தாளின் கடமை என்ன?: “தினமலர்” ஆசிரியர் அந்துமணி சிறப்புப்பேட்டி

அந்துமணி – லட்சோபலட்சம் வாசகர்களின் ஆதர்ச நாயகன். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக, தனது முகத்தைக் காட்டாமலேயே வாசகர்களின் அகத்தில் குடியிருப்பவர்.

ஞாயிறு அன்று தினமலர் வழக்கத்தைவிட அதிகமாக விற்பனை ஆகும். இதற்குக் காரணம் அந்துமணி எழுதும் பா.கே.ப., அந்துமணி பதில்கள் மற்றும் அவ்வப்போது எழுதும் சுற்றுலா தொடர்.

தினமலர் நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்புதான் அந்துமணி என்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரியும். 

தினமலர் ஊழியர்கள் பாசத்துடன் பாஸ் என்று தான் அழைப்பார்கள்.  அதற்கும் மேல், ஒரு சகோதர பாசம் அவரிடம் உண்டு. திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களை வளர்த்தெடுப்பதிலும் அலாதி பிரியம் அவருக்கு. 

இதழியலில் தான் படித்ததை பக்குவமாக தினமலரில் சேர்த்து, அதன் தனித்துவத்தை தொடர்ந்து பாதுகாப்பாய் தக்கவைப்பவர். சாதாரண மனிதர்களோடு அவர்கள் அறியாமல் பயணித்து, அவர்களின் குரல்களையும் பதிவு செய்து ஆனந்தமடைய வைப்பவர்.

நாளிதழில் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்வர். நல்ல செய்தியை கொடுக்கும் நிருபருக்கு உடனே போனில் அழைத்து பாராட்டுவார். வெகுமதி கொடுத்து மகிழ்வார் பாஸ் என்று கொண்டாடுகின்றார் தினமலர் ஊழியர்கள்.

ஆகவேதான் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் பத்திரிகையாளர் என்று அந்துமணி (கி.ராமசுப்பு) கொண்டாடப்படுகிறார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்கு அந்துமணியைத் தெரியும் என்று பலர் ஜம்பமடிப்பார்கள். ஆனால் உண்மையில் அவரை பார்த்துக் கூ ட இருக்க மாட்டார்கள். தனக்கு பழக்கமானவர்களாக இருந்தாலும், அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்த தயங்காதவர் அந்துமணி.

தன் முகம் காட்டாத அந்துமணி என்கிற கி.ராமசுப்பு, இங்கே தன் அகத்தைத் திறந்து நம்மிடையே உரையாடுகிறார்.

ஆம்… தமிழ் இதழியல் வரலாற்றிலேயே முதன் முறையாக அவரது பேட்டி!

பொதுவாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் முனைப்பாக இருப்பது உயிர்களின் குணம். நீங்கள் உங்களை.. முகத்தை.. மறைத்துக்கொண்டு செயல்படுகிறீர்கள். அப்படியொரு ஞான உணர்வு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

(சிரிக்கிறார்) ஞான உணர்வா என்றெல்லாம் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் சுதந்திரப்பறவையாக இருக்க விரும்புபவன். சாதாரண சாலையோர கடைகளில் சாப்பிடுவேன், தேநீர் குடிப்பேன்..

உதாரணமாக திருச்சி பேருந்து நிலையம் அருகே, ரெட்டியார் கடை என்று ஒரு கைவண்டி கடை உண்டு.  சாலையோரத்தில் இருக்கும் அந்தக் கடை பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  இப்படித்தான் இயல்பாய், சுதந்திரமாய் வாழ ஆசைப்படுகிறேன்.  என் முகம் பிரபலமாகிவிட்டால், இந்தச் சுதந்திரம் பறிபோய்விடும்.  ஆகவேதான் முகத்தை மறைக்க அந்துமணியை துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

முதன் முதலில் எப்போது அந்துமணியாக வாசகர்களிடையே வலம் வர ஆரம்பித்தீர்கள்.. அப்போது உங்கள் வயது..?

1987ம் வருடம் முதல் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு 27 வயது.

 மீண்டும் அதே கேள்விதான். அந்த இளம் வயதில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தோன்றுவது ஆச்சரியம்தானே.. அதனால்தான் கேட்டேன்.. ஞானி போன்ற மனநிலையா?

 (மீண்டும் சிரிப்பு) என்னை ஞானியாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது. நான் மனிதன். இயல்பான மனிதன். அவ்வளவே. ஏற்கெனவே சொன்னது போல, சுதந்திரம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகவே முகமூடி.

 இந்த அந்துமணி முகம் உருவானது எப்படி?

 ஆரம்பத்தில் மனதிற்குள் ஒரு மாதிரி, அந்துமணி முகம் உருவானது. அதை நான் ஓரளவுக்கு வரைந்துகொடுத்தேன்.  இங்கே (தினமலரில்) பீட்டர் என்ற ஓவியர் – கார்டூனிஸ்ட் இருந்தார். அவர், அந்துமணிக்கு முழுமையான வடிவம் கொடுத்தார். லென்ஸ்மாமாவும் அவர் வரைந்ததுதான்.

ஆமாம்.. உங்களைப்போலவே மிகப் பிரலமானவர் லென்ஸ் மாமா. அவர் யார்?

என்னுடைய நண்பர் ஏ.வி.பாஸ்கர்தான் ஆரம்பத்தில் லென்ஸ்மாமா. ஒரு கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னுடன் அவர் பயணிக்க முடியாமல் போய்விட்டது.  அதன் பிறகு பல, லென்ஸ்மாமாக்கள். (சிரிக்கிறார்.)

இனி கொஞ்சம் சீரியஸான கேள்விகள்.. உங்களது பார்வையில் இதழியல் (ஜர்னலிசம்) என்றால் என்ன?

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதழியல். எல்லாத் துறைகளைப்பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதையும் மீறி முக்கியமான பணி.. அரசியல்வாதிகளை அடக்கி வைக்க வேண்டியது. ஜனநாக அமைப்பில் அரசியல்வாதிகள்தான் தலைமையிடத்தில் இருப்பவர்கள். அவர்களில் நல்லவரும் உண்டு. நற்குணம் குறைவானோரும் உண்டு. அந்த நற்குணம் குறைவானோரின் செயல்கள் நாட்டையே பாதித்துவிடும். ஆகவே அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து அது குறித்து பாராட்ட வேண்டியிருந்தால் பாராட்டுவதும், விமர்சிக்க வேண்டியிருந்தால் விமர்சிப்பதும் ஒரு இதழாளனின் முக்கிய கடமை. இதில் கட்சி சார்போ, வேறு எந்த சார்போ இருக்கக் கூடாது.

தினமலர் ஆசிரியர்
(கி.ராமசுப்பு) அந்துமணி அவர்களுடன் பத்திரிகை டாட் காம் ஆசிரியர் டி.வி.எஸ். சோமு

தினமலரைப் பொறுத்தவரை, செய்தியைச் (news) சொல்வதோடு இன்றி தன் கோணத்தில் (views) வாசகர்களை இழுக்கிறது என்ற விமர்சனம் உண்டு. ஒருசெய்தித்தாள் என்பது செய்திகளைக் கொடுக்க வேண்டியது மட்டும்தானா?

அப்படி இல்லை. செய்தியை வெறும் செய்தியாகக்  கொடுப்பது மட்டும் நம் பணி அல்ல. உதாரணமாக ஒரு விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் இந்த வாகனம் விபத்துக்குள்ளானது, அதில் பயணம் செய்த இத்தனை பேருக்கு காயம், இத்தனை பேர் மரணம் என்று சொல்வது மட்டும் ஊடகத்தின் பணி அல்ல. அந்த விபத்து ஏன் ஏற்பட்டது..  சாலை மோசமா,வாகனம் சரியில்லையா.. ஓட்டுநர் மீது தவறா.. என்பதையும் ஆராய வேண்டும். அதையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் அப்படியொரு விபத்து நடக்காமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.

அதே போல அரசு ஒரு திட்டம் கொண்டுவருகிறது என்றால், அதை செய்தியாக மட்டும் வெளியிடாமல், அதனால் ஏற்படும் விளைவுகளை.. அது நன்மையோ, தீமையோ.. பாரபட்சமின்றி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல திட்டம் மேலும் நன்மை தரும் திட்டமாக மலரும்.. நல்லதில்லை என்றால் தடுக்கவும் முடியும்.

ஆகவே நியூஸ் மட்டுமல்ல.. வியூஸும் முக்கியம். அந்த வியூஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரே நிபந்தனைதான்.. அது  மக்கள் மீது கொண்ட அக்கறை!

 

சந்திப்பு: டி.வி.எஸ். சோமு

…………………………………………………………………………………………………………………………………………………………………..

பேட்டியின் இரண்டாம் நிறைவுப் பகுதி: நான் பூணூல் அணிவதில்லை! “தினமலர்” அந்துமணி மனம் திறந்த பேட்டி!