எக்ஸ்ளூசிவ்: அரசியலுக்காக திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல்!

சிறப்பு செய்தி: 

தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்குடன் திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல்.

1960ம் ஆண்டில் தனது ஆறாம் வயதில் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் முதன் முதலாக திரையில் தோன்றினார்.  அது முதல் கடந்த 57 வருடங்களாக தமிழ்த்திரையுலகில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார் கமல்.

“களத்தூர் கண்ணம்மா” படத்தில் கமல்

நாயகனாக அவர் புகழ் பெற ஆரம்பித்த நேரம், ரசிகர் மன்றங்கள் வைக்க ஆர்வத்துடன் ரசிகர்கள் பலர் அணுகினர். முதலில் மறுத்த அவர், ரசிகர்களின் அன்புத்தொல்லையால் அதற்கு உடன்பட்டார்.

அதே நேரம், “எந்தவொரு தருணத்திலும் அரசியல் ஈடுபாடு கூடாது. விசிலடிச்சான் குஞ்சுகளாக இல்லாமல், நற்பணி மன்றங்களாக செயல்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 37 வருடங்களாக கமல் ரசிகர் மன்ற்த்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன், தமிழக மக்கள் பிரச்சினைகள் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட.. அதனால் ஆளும் அதிமுக கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். கமலை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததோடு, “அரசியலுக்கு வந்து பார்” என்று சவால் விட்டனர்.

இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட கமல் முடிவெடுத்தார். தொடர்ந்து அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்த ட்விட்டுகள், பேட்டிகள், கொசஸ்தலை ஆற்றை ஆய்வு செய்தது, ஆளுந்தரப்பினர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட விசில் ஆப், தனிக்கட்சி துவங்கப்பவதாக அறிவிப்பு, அதற்கு 30 கோடி ரூபாய் திரட்டப்போவதாக அறிவிப்பு என்று கமலின் அரசியல் களைகட்டத் துவங்கியது.

“நம்மவர்” படத்தில் கமல்

இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளுக்காக அமெரிக்கா சென்றார் கமல். அங்கு அப்படத்தின் இருதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கிடையே, குமரிப் புயல், ஆர்.கே.நகர் தேர்தல் போன்ற முக்கிய விசயங்கள் குறித்துகூட கமல் ட்விட் செய்யவில்லை.. கருத்து சொல்லவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

அதே நேரம், “கமல் அமெரிக்காவில் இருந்தாலும், அவரது கண்ணசைவில்  ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்று சமீபத்திய மன்றப் பணிகளை விவரித்தார் மன்றத்தின் அகில இந்திய பொறுப்பாளர் தங்கவேலு. இது குறித்த செய்தியை பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.

பாண்டி கமல் நற்பணி மன்றத்தினர், பெரியார் ஈ.வெ.ரா. சிலையை திறந்துவைப்பது குறித்தும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையே, “தீவிர அரசியலில் ஈடுபட இருக்கும் கமல், திரைத்துறையை விட்டு முழுமையாக விலக இருக்கிறார்” என்ற அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விசாரித்த போது, “சிறு வயது முதலே கலைத்துறைதான் கமலுக்கு ஒரே நோக்கம். கலைத்துறை ஈடுபாட்டால் அவர் பெற்றதும் அதிகம், இழந்ததும் அதிகம்.  24 மணி நேரமும் திரையுலகு பற்றிய சிந்தனையோடே இருக்கும் அவர் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவதில் அக்கறை காட்டியவர். தமிழ்த்திரையுலகை அடுத்கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் கமல்.

திரையுலகின் மீது இத்தனை ஈடுபாடு கொண்டு, புதுப்புது தொழில் நுட்ப முயற்சிகளை எடுத்தவர் கமல். அதே அளவு சமூக அக்கறையும் கொண்டவர்.

அவரது உன்னால் முடியும் தம்பி, நம்மவர், அன்பே சிவம் போன்ற அவரது பல படங்கள் அவரது சமூக அக்கறையை வெளிப்படுத்துபவை.

அதே நேரம் சமூகமாற்றங்களயும் தனது படங்களில் தைரியமாக முன்வைத்தவர். பட நாயகனுக்கு இரு நாயகிகள் இருக்கலாம்.. ஆனால் நாயகிக்கு ஒரு நாயகன்தான். இதுதான் தமிழ் திரையுலகின் விதி. அதாவது தமிழ்ச் சமூகத்தின் விதியை அப்படியே திரையுலகம் பிரதி பலிக்கும்.

ஆனால் கமல் தனது,  மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் “இரண்டாவது” நாயகனாக துணிந்து நடித்தார். அதாவது அப்பட நாயகிகளுக்கு இரண்டாவது கணவர் அல்லது காதலராக வருவார்.

பாண்டியின் கமல் மன்றத்தினர் பெரியார் சிலை திறப்பு

இப்படி தனது தனிப்பட்ட இமேஜ் குறித்து கவலைப்படாமல், மறைமுகமாகக்கூட சமூகத்தின் இழிவுகளை புறந்தள்ளி அதை படத்தில் வெளிப்படுத்தியவர்.

அதே நேரம் தன்மீதோ தனது ரசிகர் மன்றத்தினர் மீதோ அரசியல் முத்திரை விழுந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அவரை முழு நேர அரசியலுக்குள் இழுத்துவிட்டன.

எதையும் திட்டமிட்டு சிறப்பாக செய்யும் கமல், அரசியல் குறித்தும் முழுமையாக திட்டமிட்டு விட்டார்.

திரைத்துறையிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.

தற்போது விஸ்வரூபம் 2 இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். அடுத்து சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் இருக்கின்றன.  அவை 2020ம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும்.

இடையிடையே மக்களை சந்திப்பது பொதுக்கூட்டங்களில் பேசுவது என்று இருந்தாலும், 2020ம் ஆண்டோடு திரையுலகை விட்டு முழுமையாக விலகுவார்.

தங்கவேலு

2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல்தான் அவரது இலக்கு.

ஆகவே  2020ம் ஆண்டோடு அவர் திரையுலகைவிட்டு விலகுவது உறுதி” என்கிறது கமலுக்கு நெருங்கிய வட்டாரம்.

அகில இந்திய கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் தங்கவேலை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம்.

அவரும், “கமல் அப்படித்தான் முடிவெடுப்பார். திரைத்துறை அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது. ஆகவே அடுத்த இரு படங்களை முடித்துவிட்டு திரையுலகு பயணத்தை நிறைவு செய்வார் ” என்றார்.

திரையுலகில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அரசியலில் புது சகாப்தம் துவங்குமாஃ

காலம் பதில் சொல்லும்!

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Exclusive : Kamal is leaving films for Politics, எக்ஸ்ளூசிவ்: அரசியலுக்காக திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல்!
-=-