சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடை செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விசாயப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது

இதற்கிடையில், முழு ஊரங்கு காரணமாக விவசாயப் பொருட்கள் வீணாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. விளைந்த பழங்கள், காய்கறிகள், பூக்கள் விற்பனை செய்யப்பட முடியாமல், அழுகி வீணாகிப் போனது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை டாட் காம் உள்பட பல ஊடகங்களில் வெளியாகின.

இது தொடர்பாக, அகில இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன்,   கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும்  மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடைநீக்கம்  செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.