விதி மீறலால் ‘சீல்’ வைக்கப்பட்ட  கட்டடத்துக்கு விதிவிலக்கு; துணை முதல்வருக்கு அதிகாரிகள் பரிந்துரை

--

சென்னை,

விதிமீறி கட்டப்பட்டிருந்த  கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான பரிந்துரையை சிஎம்டிஏ அதிகாரிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அனுப்பி உள்ளனர்.

விதிமீறல் கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டு கடந்த 11ந்தேதி, சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தும் வகையில் விண்ணப்பங்கள் பெறலாம், ஆனால் அதுகுறித்து முடிவு எடுக்கக்கூடாது என உத்தர விட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, விதி மீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னையில் விதிகள் மீறி கட்டியதாக, எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நட்சத்திர ஓட்டல், ஐ.டி., வளாகம் ஆகியவை கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தில் விதிகளுக்கு மாறாக பல திருத்தங்கள் செய்யப்பட்டதாக கட்டத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்,’சீல்’ வைத்தனர்.

மேலும், தி.நகர் உள்பட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களில் உள்ள விதிமீறல்களை வரன்முறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் பரிந்துரையின் பேரில், விதிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கோப்புகள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.