டில்லி

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக இறங்கி உள்ளன.  இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா உடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.  இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்ட் எனப்பெயரிடப்பட்டுள்ளது,  இந்த தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் வழங்க சீரம் இன்ஸ்டிடியூட் புனைவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் அளித்துள்ள விண்ணப்பம் குறித்து நிபுணர் குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் அளித்துள்ள விண்ணப்பம் ஒன்று மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.   இக்கூட்டத்தின் முடிவுகள் இந்திய மருத்துவ கட்டுப்பாடு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே கோவி ஷீல்ட் தடுப்பூசிக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.   அதனால் இந்திய அரசும் ஒப்புதல் வழங்கக் கூடும் என எதிர்பார்ப்பு உள்ளது.