கொச்சி: 
கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சி மக்கள், இன்று காலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு மும்மடங்கு முழு அடைப்பை கடைபிடிக்க உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இன்றிலிருந்து மும்மடங்கு முழு அடைப்பை கடைபிடிக்க உள்ளனர் மக்கள். நேற்று மட்டும் திருவனந்தபுரத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் தற்போது மொத்தமாக திருவனந்தபுரத்தில் மட்டுமே 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப்பற்றி மாநில காவல் துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறுகையில்: இன்று காலை ஆறு மணியிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்கு இங்கு மும்மடங்கு முழுஅடைப்பு கடைபிடிக்கப்படும். அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன, நகரிலுள்ள எந்த சாலையிலும் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது, என்று அவர் கூறியுள்ளார்.
மும்மடங்கு முழு அடைப்பு என்றால் என்ன?
இந்த மும்மடங்கு முழுஅடைப்பு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதம் காசர்கோடு மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முழு அடைப்பின் முதல் நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடுமையாக முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படும். திருவனந்தபுரத்திலிருந்து வெளியில் செல்வதற்கோ அல்லது திருவனந்தபுரத்தின் உள்ளே நுழைவதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. மனிதர்கள் வெளியில் நடமாடக் கூடாது. மேலும் வாகன போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கும்.
இரண்டாம் கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்கள் வெளியில் வரவோ அல்லது உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனால் திருவனந்தபுரத்தில் மற்ற பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க  முடியும்.
மூன்றாம் கட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இருக்கும் வீடுகளும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்த வீடுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும். கொரோனா பரவுதலை தடுக்க இந்த நிலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
காசர்கோடு மாவட்டத்தில் மும்மடங்கு முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்ட போது, காவல்துறையினருக்கும் மளிகை பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டது. அதேபோல் திருவனந்தபுரம் மக்களுக்கும் வழங்கப்படும். மிகவும் நெருக்கடியான நிலையில் மட்டுமே தகுந்த ஆதாரத்தை காண்பித்து மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தண்டிக்கப்படுவர்.
காசர்கோட்டில் ஏப்ரல் மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட இந்த மும்மடங்கு முழு அடைப்பால், மே மாதம் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.