முகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்

மும்பை

லகின் பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அறுகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிபொருட்கள் இருந்துள்ளதால் பரபரப்பு உண்டாகியது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பீடார் சாலையில் அமைந்துள்ள ஆண்டிலியா என்னும் பகுதி உள்ளது.  உலகின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீடு இங்கே உள்ளது.  இவரது வீட்டின் வெளியே பந்தயத்துக்குப் பயன்படுத்தப்படும் ஸ்கார்ப்பியோ கார் ஒன்று வெகுநேரமாகக் கவனிப்பார் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையொட்டி நடந்த சோதனையில் இந்த காரில் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது.  இந்த பகுதியில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  காவல்துறையினர் இந்த வீடு இருந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர்.  காரின் அருகே பொதுமக்கள் செல்ல முடியாமல் பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து வெடிபொருட்களைச் செயல் இழக்கச் செய்துள்ளனர்.   மும்பை நகரம் இதனால் கடும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.  மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதற்காக உரிய விசாரணையை உடனடியாக நடத்தி அறிக்கை அளிக்க மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.