டில்லி

ரசு திருப்பி தர வேண்டிய ஜி எஸ் டி பணம் இன்னும் வராததால் பல ஏற்றுமதியாளர்கள் பண நெருக்கடியில் உள்ளனர்.

ஜி எஸ் டி கணக்கு சமர்ப்பித்து சரிபார்த்தவுடன் ஏற்கனவே தொழிலதிபர்கள் மூலப் பொருட்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் அரசால் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பது ஜி எஸ் டி சட்டங்களில் ஒன்றாகும்.  ஆனால் இதுவரை யாருக்கும் அந்தப் பணம் திருப்பி அளிக்கப்படாததால் பல தொழிலதிபர்கள் குறிப்பாக ஏற்றுமதியாளர்கள் பணப் பற்றாக்குறையில் அவதிப்படுகின்றனர்.  ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், சமீபத்தில் ஜி எஸ் டி கமிட்டியின் செயலாளர் ஹஷ்முக் ஆதியாவை சந்தித்து இதுபற்றி கூறி உள்ளனர்.

அவர்கள் தெரிவித்ததாவது :

“நாங்கள் மூலப் பொருட்களுக்கு செலுத்திய ஜி எஸ் டி வரி எங்களுக்கு இதுவரை திருப்பி அளிக்கப்படவில்லை.  இதனால் எங்களில் பலருக்கு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இது பண்டிகைக் காலம் ஆகும்.  இந்த பணம் ஜி எஸ் டி யில் முடங்கி உள்ளதால் பணியாளர்களுக்கு தர வேண்டிய போனஸ், மற்றும் பாக்கித் தொகைகளை எங்களால் தர இயலவில்லை.  அது மட்டும் இன்றி எங்களின் அன்றாட செலவுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வு ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிப்பதாகும்.   அப்படி விலக்கு அளிக்கும் வரையில் எங்களுக்கு வர வேண்டிய தொகையில் 90% உடனடியாக அளிக்க வேண்டும். இது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு பணக் கஷ்டம் உண்டாவதை தடுக்கும்.  உடனடியாக இந்த 90% தொகை அளிப்பதால் அவர்களின் தொழிலும் முடங்காது.  ஊழியர்களுக்கு வர வேண்டிய தொகையையும் அளிக்க முடியும்.” என தெரிவித்துள்ளனர்.