Random image

அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் விசாரணை ஆணையங்கள்: உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை:

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்த விசாரணை ஆணையம் மற்றும் ஸ்டெர்லைட் விசாரணை ஆணையம், புதிய சட்டமன்ற கட்டிட முறைகேடு குறித்த விசாரணை ஆணையம் போன்ற விசாரணை ஆணையங்கள் குறித்து சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி கருத்துக்களை தெரிவித்து உள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின்போது சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப் பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார்.

இந்த ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், அதற்கான நியமிக்கப்பட்ட  ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதிக்கு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக உயர்நீதி மன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்த நிலையில், அது .சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை கண்டித்து விசாரணை ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விசாரணை ஆணையங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, புதிய தலைமைச்செயலகம் தொடர்பான விசாரணை ஆணைய நீதிபதி ராஜினாமா செய்த நிலையில், புதிய நீதிபதியாக   யாரை நியமிப்பது என்பது குறித்து வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியது.

அதுபோல, கடந்த ஆண்டு , ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.