சென்னை: 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ஆரம்பித்திலிருந்தே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓ.என்.ஜி. சி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தினர்  எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தைக் கடந்த ஆண்டு கையகப்படுத்தி ஆழ்துளைக் கிணறு அமைக்க முற்பட்டனர்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து  அந்தப்பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது மத்திய அரசு மீண்டும் அந்தப்பணிகளை தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மத்தியஅரசு ஹைட்ரோகார்பன் எடுக்க தேர்ந்தெடுத்த 31 இடங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் நெடுவாசலும் ஒன்று.  ஆனால் இத்திட்டத்தை இங்கே செயல்படுத்த  எந்தத் தகவலும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும், குறைந்தபட்சம் கருத்துக்கேட்புக் கூட்டத்தைக்கூட அரசு நடத்தவில்லை என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

 இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில், இந்தத் திட்டம், நிலைமையை மிக மோசமாக்கும். அதனால் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்தப்போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, விவசாயிகளுடன் கைகோர்த்துள்ளனர்.  ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், புதுக்கோட்டை மாவட்டத்தில்  சுமார் 100 கிராமங்களில் 5 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று அஞ்சப்படுகிறது.