லண்டன்: 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 1 ரன்னை கூடுதலாக நடுவர்கள் வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு ஓவர்த்ரோ தொடர்பானதாகும். இந்தக் குற்றச்சாட்டை கூறியிருப்பவர் புகழ்பெற்ற முன்னாள் நடுவர் ஆஸ்திரேலியாவின் சைமன் டாஃபெல். இதுவொரு தெளிவான தவறு, இதுவொரு பிழையான தீர்ப்பு என்று கூறியுள்ளார் அவர்.

இங்கிலாந்து வீரர்களான ரஷீத் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இறுதி ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் இரண்டாவது ரன் ஓடுவதை நிறைவு செய்யவில்லை. அதாவது, அவர்கள் ஒருவரையொருவர் கடக்கவில்லை. அந்த நேரத்தில், மார்ட்டின் குப்தில் வீசிய பந்து ஓவர்த்ரோ ஆகி, பவுண்டரி லைனை தொட்டது.

இதற்காக, இங்கிலாந்து அணிக்கு மொத்தமாக 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால், விதிமுறைப்படி 5 ரன்கள்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் டாஃபெலின் குற்றச்சாட்டு.

இந்த 1 ரன் அதிகம் வழங்கப்பட்டதால், நியூசிலாந்து அணியின் தலையெழுத்தே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில், நடுவர்கள் செய்யும் தவறுகள் அணிகளின் தலையெழுத்தை மாற்றிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.