பெண்களைப் பணி புரியச் சொல்வது பாலியல் கொடுமை ஆகாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை

பெண்களை வற்புறுத்தி பணி புரிய வைப்பது பாலியல் கொடுமை ஆகாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறையின் கீழ் டிரேட்மார்க் துறை செயல்பட்டு வருகிறது.  இந்த துறையின் சென்னை அலுவலகத்தில் துணை பதிவாளராக நடராஜன் என்பவர் பணி புரிந்து வருகிறார்.   கடந்த 2013 ஆம் ஆண்டு  அதே அலுவலகத்தில் உதவி பதிவாளராகப் பணி புரியும் ஒரு பெண் அலுவலர் நடராஜன் தன்னிடம் வரம்பு மீறிப் பேசுவதாக புகார் அளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நிகழ்வு குறித்து அந்த பெண் அலுவலர் நடராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.   இந்த புகார்கள் தொடர்பாக சமூகநலத்துறை கமிட்டி மற்றும் துறை அதிகாரி ஆகியோர் தனித்தனியாக விசாரணை செய்தனர்.   ஒரே புகார் மீது இரண்டு வித விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடராஜன் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பாயம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.   நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.    மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வு அளித்த தீர்ப்பில், “முதலில் அந்த பெண் பொதுவான குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்துள்ளார்.   ஆனால் அதன் பிறகு தனக்கு நடராஜன் பாலியல் தொல்லை தந்தாக மற்றொரு புகார் அளித்துள்ளார்.

அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் தங்கள் வேலையை முடிக்காவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம்.   கோபத்தில் அவர் ஓரிரு வார்த்தைகள் கடிந்து கூறலாம்.   அது பாலியல் கொடுமை ஆகாது.    அவர் பணியை முடிக்க வற்புறுத்தியதற்காக அவர் மீது பாலியல் புகார் அளிப்பது தவறான செய்கை ஆகும்.

பெண்கள் தாங்கள் பணி புரியும் இடங்களில் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தைச் சுயமரியாதையை பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும்.   அதை விடுத்து மற்றவர்களைத் துன்புறுத்த அந்த சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.  மனுதாரர் நடராஜன் மீதான புகார் தவறாகத் தரப்பட்டுள்ளதாகக் கருதுவதால் அந்த புகாரை ரத்து செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.