தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை! திருநாவுக்கரசர்

 

விருதுநகர்,

நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , ஆளுநர் காலம் தாழ்த்துவது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.

நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது,

தமிழகத்தில் எந்தவித  அடித்தளமே  இல்லாத நிலையில், பாரதியஜனதா கட்சி, தமிழக  ஆட்சியிலும், அ.தி.மு.க. கட்சி விவகாரத்திலும் தலையிட்டு வருகிறது. இது சரியல்ல என்று கூறினார்.

மேலும், அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வரும்  உள்கட்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடாது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வரை அந்தக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

கவர்னர் பெரும்பான்மை உள்ளவரை ஆட்சியமைக்க அனுமதிப்பதுதான் சரியானது. பின்னர்  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அளுநர் அவகாசம் அளிக்கலாம் என்றார்.

வட மாநிலங்கள் சிலவற்றில் மத்திய பாரதிய ஜனதா அரசு  இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு ஆட்சியை கலைத்தது. பின்னர் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் அந்த ஆட்சிகள் அமைக்கப்பட்டன.

எனவே அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க. ஆட்சி தொடர ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும்,  தமிழகத்தில் தற்போது  அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் கடும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அதனால் நிலையான அரசை அமர வைக்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் தாழ்த்துவதால் குதிரைப் பேரமும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்பு உருவாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.