புதுடெல்லி:

எஃப் 21 ஜெட் விமானங்களை இந்தியாவுக்கு விற்க ஒப்பந்தம் ஏற்பட்டால், வேறு எந்த நாடுகளுக்கும் விற்கமாட்டோம் என விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீடு தெரிவித்துள்ளது.


18 பில்லியன் டாலர் மதிப்பில் 114 ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

இதில் முக்கிய போட்டியாளர்களாக லாக்ஹீடு எஃப்-21, போயிங் எஃப்/ஏ-18, டஸால்ட் அவியேஷன் ரஃபேல், ஈரோ ஃபைட்டர் டைபூன், ரஷ்யன் ஏர்கிராப்ட் எம்ஐஜி 35 மற்றும் சாப்ஸ் கிரிபென் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அமெரிக்காவின் போர் விமானங்கள் தயாரிப்பில் ஜாம்பவனாக திகழும் லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனத்தின் வணிக வளர்ச்சிப் பிரிவு துணை தலைவர் விவேக் லால் கூறும்போது, எஃப்-21 ரக விமானங்களை எங்களிடம் இந்தியா வாங்கினால், அந்த ரக விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் விற்க மாட்டோம்.

இந்தியாவில் உள்ள 60 விமானப் படை நிலையங்களிலிருந்து இயக்கும் வகையில் எஃப்-21 ரக விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதிக சக்தி கொண்ட என்ஜின், எலக்ட்ரானின் சிஸ்டம் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு இடவசதி கொண்டதாக இருக்கும்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால், டாடா குழுமத்துடன் இணைந்து விமானங்களை தயாரிப்போம். இந்தியாவின் ஓட்டுமொத்த பாதுகாப்பு தளவாடங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.