புதுடெல்லி: குறைந்தளவு மற்றும் மிதமான கொரோனா நோய் அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, ஃபேபிஃப்ளூ(FabiFlu) மருந்தை அவசரகால பயன்பாட்டு மருந்தாக அங்கீகரித்துள்ளது இந்திய மருந்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பு.

இன்று மாலை முதல் சந்தையில், கொரோனா சிகிச்சைக்காக(லேசான மற்றும் நடுத்தர அறிகுறிகளுக்காக) அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபேபிஃப்ளூ மருந்து, அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும், அவசரகால மருந்து வகைப்பாட்டின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த மருந்தை தயாரிக்கும் கிளென்மார்க் ஃபார்மசூடிகல் நிறுவனம், அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. 200 மில்லிகிராம் அளவுள்ள ஒரு மாத்திரையின் விலை ரூ.103 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 34 மாத்திரைகளைக் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ.3500 என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையானது மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றில், மருத்துவரின் பரிந்துரைப்படி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சையின் முதல்நாளில், நோயாளிக்கு 1800 மில்லிகிராம் அளவுள்ள மாத்திரை ஒருநாளில் 2 முறை வழங்கப்பட வேண்டும் மற்றும் இரண்டாவது நாளில் 800 மில்லிகிராம் அளவுள்ள மாத்திரை ஒருநாளில் இரண்டுமுறை வழங்கப்படும்.

அதற்கடுத்த நாட்களில், மருத்துவரின் அறிவுரைப்படி அளவுகள் நிர்ணயிக்கப்படும். 18 முதல் 75 வயதிற்குள் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.