இனி ரயில் நிலையங்களில் முகக் கவசம், கையுறை விற்கப்படும்

டில்லி

னி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் விற்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும், பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள் போன்றவை விற்கும் கடைகளை நாம் பார்த்து வருகிறோம்.  ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் பல ரயில் நிலையங்களில் இந்தக் கடைகளில் ஒரு சில பொருட்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.   இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு பொருட்களை விற்க கடைகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதையொட்டி ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் இனி முகக் கவசம், கையுறை சானிடைசர் போன்ற பொருட்களை விற்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  பல பயணிகள் பயண அவசரத்தில் இவற்றை மறந்து விட வாய்ப்புள்ளது.  அவர்களின் வசதிக்காக இவற்றை ரயில் நிலையத்தில் அதிக பட்ச சில்லறை விலைக்கு விற்கப்பட உள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ரயில்வே நிர்வாகம், படுக்கை விரிப்புக்கள், தலையணை, போர்வைகள்  அளிப்பதை நிறுத்தி விட்டது.  எனவே ரயில் நிலையக் கடைகளில் இனி படுக்கை விரிப்பு,  தலையணை, தலையணை உறை, கம்பளி, டவல் போன்ற பொருட்களும் விறனை செய்யப்பட உள்ளது. இவற்றை பெட் கிட் என மொத்தமாகவோ தனித்தனியாகவோ வாங்கிக் கொள்ளலாம்.