நடிகர்களின் முகத்திற்காக ஓட்டுகள் விழுவதில்லை: நடிகை ரோஜா

சென்னை: நடிகர்கள் என்றாலே முகத்திற்காக ஓட்டுப்போடும் காலமெல்லாம் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் ஆந்திர அரசியல்வாதியும் நடிகையுமான ரோஜா.

தற்போது ஆந்திர சித்தூர் மாவட்டத்தின் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஜா, தனது தொகுதி ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியதற்காக, தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெறும் நடிகர் என்பதற்காக அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போட்ட காலமெல்லாம் இப்போது இல்லை. மக்களுக்காக, அவர்களின் தேவை அறிந்து ஓடோடிச் சென்று சேவை செய்யும் நபர்களுக்குத்தான் ஓட்டு கிடைக்கிறது.

சமூகவலைதளங்களின் மூலம் யார் எப்படி என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் புத்திசாலிகள். யாரை எங்கே வைக்க வேண்டுமென அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தற்போதைய தமிழக முதல்வர் தொடக்கத்தில் அறியாத நபர் போல் இருந்தாலும், தற்போது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் நான் தமிழக அரசியலை கவனிப்பதில்லை என்றாலும், நான் அறிந்தவரை தற்போதைய தமிழக முதல்வர், மக்களுக்கு நல்லது செய்பவராகவே இருக்கிறார்” என்றார் ரோஜா.