விமானப் பயணத்துக்கு முக அடையாளம் : புதிய முறை அறிமுகம்

டில்லி

னி விமானப்பயணத்துக்கு போர்டிங் பாஸுக்கு பதில் முக அடையாள முறை கொண்டு வர உள்ளதாக இந்திய விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில் விமானப் பயணம் செய்வோர் போர்டிங் பாஸ் பெறுவதன் மூலம் பயனம் செய்து வருகின்றனர்.    ஒவ்வொருவரின் அடையாளங்களை பரிசோதிப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் ஆன்லைன் மூலம் போர்டிங் பாஸ் பெறும் முறை ஏற்படுத்தப் பட்டது.  ஆயினும் அதுவும் ஓரளவு நேரம் எடுத்துக் கொள்ளும் முறையாகவே இருந்தது.

சமீப காலமாக பிரதமர் மோடி விமானப் பயணங்களை பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.  பிரதமர் நரேந்திரா டிஜிடல் யாத்திரை என்னும் திட்டம் ஒன்று இதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.   அந்த திட்டத்தின் ஆலோசனைப்படி இனி போர்டிங் பாசுக்கு பதிலாக முக அடையாளம் காணும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

இந்த திட்டத்தில் கணினி காமிரா மூலம் முகம் அடையாளம் காணப்பட்டு பயணிகள் விமான நிலையம் அல்லது விமானத்தினுள் செல்ல முடியும்.   கடந்த ஜூன் மாதம் இந்த திட்டத்துக்கான யோசனை அளிக்கப்பட்டது.   அப்போது இந்த திட்டம் முதலில் பிரதமர் வாரணாசியில் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக கூறப்பட்டது.   ஆனால் அது நடைபெறவில்லை.

தற்போது மாநகர விமான நிலையங்களில் நான்கு விமான நிலையங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது.   டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில்  அறிமுகப்படுத்தப்படும் இந்த முறையினால் பயணிகளை எளிதிலும் விரைவாகவும் அடையாளம் காண முடியும் என கூறப்படுகிறது.