பிரபல சமூக வலைதளமான முகநூல் வலைதளம், ஃபேஸ்புக் டேட்டிங் எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை இந்தியா உள்பட சில நாடுகள் தவிர்த்து, அமெரிக்கா உள்பட 20 நாடுகளில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இந்த சேவையை  பயனர்கள் ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும், டிண்டர் போன்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்-ஐ போல் ஏற்கெனவே வைத்துள்ள கணக்கிலோ, புதிய கணக்கு தொடங்கியோ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தங்கள் விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப இணையைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.

தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சேவை மூலம்,  நிகழ்நேர வரைபட பின்தொடர்பு போன்ற டேட்டிங் தகவலை மெசெஞ்சர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளும் வசதியும்  செய்யப்பட்டு உள்ளது.

டேட்டிங் சேவையில் இணைந்த நண்பரையோ, அல்லது பின்தொடர்பாளர்களில் யாரேனும் ஒருவரையோ சீக்ரெட் கிரஸ் என்ற பெயரில் உள்ள பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது.

யாரோ ஒருவர் கிரஷ் என்ற பெயரில் இணைத்துள்ளதாக அவருக்கு அறிவிக்கை மட்டுமே தெரியவரும். டேட்டிங் சேவையிலும் ஸ்டோரி என்ற பெயரில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வசதி அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா ( Guyana), லாவோஸ், மலேசியா, மெக்சிகோ, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுரினாம், (Suriname)தாய்லாந்து, உருகுவே, வியட்னாம் மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கு 2020-ன் தொடக்கத்தில் அமலுக்கு வரும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.