டில்லி

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக மாணவர்கள் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.  இதில் திடீரென புகுந்த மர்ம நபர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.   இதில் மாணவர் ஒருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   முதலில் அவர் 50 வயதான இஸ்லாமியர் என தகவல்கள் தெரிவித்தன.   ஆனால் தற்போது அவர் ராம் கோபால் சர்மா என்னும் இளைஞர் என கூறப்படுகிறது.   அவர் தனது முகநூலில் இச்சம்பவம் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.  அவற்றில் இவர் பல்கலைக்கழகம் அருகே நடந்து வரும் காட்சிகள் இருந்தன.

நேற்று மாலை சுமார்  5.30 மணிக்கு முகநூல் நிர்வாகிகள் அவரது கணக்கை முடக்கி உள்ளனர்.   இது குறித்து முக நூல் நிர்வாகம், “முகநூலில் வன்முறை குறித்த எந்த பதிவுக்கும், பதிவிடுவோருக்கும் இடம் கிடையாது.   மேலும் இந்த சம்பவத்தைப் புகழ்ந்து கருத்து தெரிவிப்போர் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிப்போரையும் அடையாளம் காணப்பட்டு அத்தகைய கருத்துக்கள் நீக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.