அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகநூல் & இன்ஸ்டாகிராம் சேவைகளை முடக்கிய மார்க் ஸுகர்பெர்க்..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து காலவரையின்றி தடைசெய்யப்பட்டுள்ளார். இத்தகவலை, முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிகாலம் முடிவடையவுள்ள தருவாயில், அவரின் முகநூல் பதிவுகள் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க் ஸுகர்பெர்க் கூறியுள்ளதாவது, “இந்த இக்கட்டான நேரத்தில், எங்களின் சேவைகளை, அமெரிக்க அதிபர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதானது, உண்மையில் அபாயமானது. எனவே, அவரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து காலவரையற்ற முறையில் தடைசெய்யப்பட்டுள்ளார். அவரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த தடை உத்தரவு, குறைந்தபட்சம், அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிகாரம் கை மாறும் வரையாவது நீடிக்கும்” என்றுள்ளார்.

டிரம்ப்பின் செய்தி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் நடவடிக்கையால், டிவிட்டரில் டிரம்ப்பின் கணக்கு முடக்கப்பட்டு 12 மணிநேரங்கள் கழித்து, அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டிவிட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரை, டொனாலட் டிரம்ப்பிற்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையாக இது கருதப்படுகிறது.

அதிபர் தேர்தலில் முறைகேடு செய்தே எதிர்க்கட்சி வென்றுள்ளது என்ற டிரம்ப் செய்துவந்த ஆன்லைன் பிரச்சாரத்தையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தை திக்குமுக்காடச் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.