முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிராந்தியத்திற்கான பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ், பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற விஷயம், தற்போது அந்நிறுவனத்திற்குள் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கான, பொதுக்கொள்கை இயக்குநராக உள்ளார் அன்கி தாஸ். இந்தியா, முகநூலுக்கான பெரிய சந்தை என்ற வாதத்தைக் காரணம் காட்டி, பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று இவரின் செயல்பாடு தொடர்பாக செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

இந்திய அரசியலில் தற்போதைய நிலையில், இந்த விவகாரம் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. முகநூல் நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்நிலையில், முகநூல் நிறுவன ஊழியர்களின் ஒரு குழுவானது, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளது.

இக்கடிதத்தில், அன்கி தாஸ் தலைமையில் செயல்படும் முகநூல் நிறுவனத்தின் இந்தியக் குழு ஊக்குவித்த முஸ்லீம் விரோதப் போக்கு தொடர்பாக, சில கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பிரிவு முகநூல் நிறுவனத்தின் கொள்கை வகுப்பு குழுவில், பலதரப்பட்ட பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

மொத்தம் 11 ஊழியர்கள் இணைந்து, முகநூல் நிறுவன தலைமைக்கு, இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். முஸ்லீம் மத விரோதப் போக்கை கைவிட்டு, அதிகளவிலான கொள்கை நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.