“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.
33333
 நிலாபாரதி 
சாதாரண பாரமர் இப்படி ஓர் கருத்தை கூறினால் ஏதோ அறியாமையில் சொல்கிறார் என்று விட்டுவிடலாம். ஆனால்  பலர் அறிந்த பிரபலம், ஐ.பி.எஸ்., படித்தவர், மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர் இப்படிச் சொல்வது  நகைப்புக்குரியது.   மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்துவதுபோல் உள்ளது.
பெண்கள் இதுபோன்ற சமூகக்குற்றங்களை எதிர்கொள்ளாமல் பயந்து ஒளிந்துகொள்ள சொல்வதுபோல இருக்கிறது.
குற்றங்களை தடுக்கவேண்டிய பெரும்பொறுப்பைக்கொண்ட காவல் துறையிலும் தவறுகள் நடக்கின்றன. அப்படியானால் காவல்துறையே வேண்டாம் என்று  கலைத்துவிட வேண்டுமா?
சிறுசிறுகுற்றங்களை  தடுக்காததன் விளைவே  இம்மாதிரியான பெரும் பாதகங்களுக்கு காரணமாகிறது. பெண்களுக்கு புத்திசொல்வதைவிட ஆண்களுக்கு ஒழுக்கத்தை உணர்த்துங்கள்.
இதுபோன்ற குற்றங்களுக்கு காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்தாலே குற்றங்கள் அருகிவிடும் . அதே போல பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவது, கேலி செய்வது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும்.  இப்படிச் செய்தாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்.
நெருப்பைதடுக்காமல், அணைக்காமல் , எதையும் ஒளித்துவைப்பதுபோல் பயனில்லை!
பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது::
“மனிதன், பெண்களை, தனக்குரிய  ஒரு சொத்தாக  கருதுகிறானேயொழிய….   தன்னைப் போன்று உணர்ச்சிகளுக்கு  அருகதையுள்ள ஒரு உயிர் என்று மதிப்பதில்லை!”
(முகநூலில் என் புகைப்படத்தை பதிந்ததில்லை. முகப்புப்படமாகவும் இயற்கை காட்சிகளையே வைத்திருக்கிறேன். காரணம் இயற்கை காட்சிகள் மீதுள்ள ஈடுபாடே. மற்றபடி பயம் அல்ல.)
(கருத்துக்கள் தொடரும்)