காந்திநகர்

முகநூல் “பூஸ்ட் யுவர் பிசினெஸ்” என்னும் தலைப்பில், நாட்டின் 100 நகரங்களில் இருந்து 20000 தொழில் அதிபர்களை இணைத்து தொழில் மேம்பாடு அடைய உதவப் போகிறது.

குஜராத் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து பூஸ்ட் யுவர் பிசினெஸ் என்னும் குழு ஒன்றை உருவாக்க முகநூல் திட்டமிட்டுள்ளது.  இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தக் குழுவில் நாடெங்கும் உள்ள 100 நகரங்களில் இருந்து சுமார் 20000 தொழில் அதிபர்களை இணைக்க உள்ளது.

இந்த குழு நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானியால் துவக்கப்பட்டது.

இது பற்றி இந்தக் குழுவின் தெற்கு ஆசியத் தலைவர் ரிதேஷ் மேத்தா கூறியதாவது :

”இது நடுத்தர மற்றும் சிறு தொழில் புரிவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  இதன் மூலம் முதலில் தொழில் முனைவோர் தங்களின் செலவை வெகுவாகக் குறைக்க முடியும், முகநூலில் கணக்கு தொடங்க செலவில்லை.  வாடிக்கையாளருடன் தொடர்பு என்பதும் செலவில்லை.  புது வாடிக்கையாளரை கண்டுபிடிக்கும் செலவும் இல்லை.  மொத்தத்தில் மார்கெட்டிங் செலவுகள் முழுமையாகக் குறையும்.  இரண்டாவது நன்மை தொழில் முனைவோரால் மிக எளிதாக  மேலும் மேலும் முகநூல் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  வாடிக்கையாளர்களை அணுக முடியும்.” என தெரிவித்துள்ளார்.

”இந்தியாவில் மட்டும் 201 மில்லியன் மக்களால் முகநூல்  உபயோகிக்கப்படுகிறது.   அதில் 95% மக்கள் மொபைல் மூலம் உபயோகிக்கின்றனர்.  உலக அளவில் 65 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்துக்கான பக்கத்தை வைத்துள்ளனர். இந்தியாவில் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களில் 57% பேர் தொழில் முனைவோர்கள்” என முகநூல் நிறுவனம் தெரிவிக்கிறது