குழந்தைகள் தொடர்பான 8.7 மில்லியன் பாலியல் படங்களை நீக்கியது ஃபேஸ்புக்

8.7 மில்லியன் எண்ணிக்கை கொண்ட குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றிவிட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்கள், தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.

facebook

இதுகுறித்து ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன. குழந்தைகள் தொடர்பான படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பிய பிறகு கிட்டத்தட்ட 99 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டன. கடந்த மூன்று மாதங்களில் பேஸ்புக் தளத்தில் இருந்து 8.7 மில்லியன் குழந்தைகளைத் தவறாகக் காட்டும் பாலியல் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் மெஷின் கற்றல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

ஃபேஸ்புக் வகுத்துக்கொண்ட சமூக நியதி கொள்கை குழந்தைச் சுரண்டலைத் தடை செய்கிறது. பாலியல் நோக்கமற்ற படங்களாக அவை இருந்தாலும், குளியலறையில் குழந்தைகள் குளிப்பது போன்ற வெளித்தோற்றத்தில் தீங்கான தோற்றம் தரும் தேவையற்ற படங்களை தவிர்க்க பேஸ்புக் விரும்புகிறது.

மேலும், ஆன்லைன் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் தடயவியல் விசாரணைகள் போன்றவற்றில் செயல்பட, சட்ட அமலாக்க பின்னணி கொண்டவர்களிடம் பயிற்சிபெற்ற சிறப்பு தொழில்நுட்பக் குழு எங்களிடம் உள்ளது. இவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்வார்கள்.

தவறான தொடர்புகளோடு மிகவும் திறமையோடு செயல்பட்டுவரும் ஃபேஸ்புக் கணக்குகளை இவர்களால் கண்டறிய முடியும். அதன்மூலம் வலைதள பிளாட்பாரங்களில் உலவும் குழந்தை சுரண்டல் உள்ளடக்கத்தை அடையாளம் கண்டு உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அக்கணக்குகளை நீக்கவும், தடுக்கவும் எங்களின் தொழில்நுட்பக் குழுவால் முடியும்.

போட்டோ மேட்ச்சிங் தொழில்நுட்பத்துடன் கூடுதலாக, நாங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் கற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் குழந்தை நிர்வாணம் மற்றும் அறியப்படாத பல குழந்தைச் சுரண்டல்களின் உள்ளடக்கக்கங்கள் பதிவேற்றப்படும் நிமிடங்களிலேயே முன்னெச்சரிக்கையாக கண்டறிந்து ஆரம்பத்திலேயே அதைத் தடுத்துவிடுவோம்.

பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பாலியல் சுரண்டலைத் தடுக்க செயல்பட்டு வரும் உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் தொழில்நுட்ப நிறுவனங்களோடு கரம்கோத்து நாங்கள் இதைச் செயல்படுத்தி வருகிறோம் ”

இவ்வாறு ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.