சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு இறங்கு முகமா? : ஒரு அலசல்

டில்லி

டந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்தது குறித்த ஒரு ஆய்வு இதோ.

சத்திஸ்கர், மத்தியப்பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதின. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான முன்னோடியாக கருதப்படும் இந்த தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்த தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் அக்கட்சி இறங்கு முகத்தில் உள்ளதாக அர்சியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி சந்தேகத்துக்கு உரியது என ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பாஜகவின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் பலவற்றை பாஜக ரத்து செய்துள்ளது. இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் பாஜகவின் மேல் கடும் அதிருப்டி அடைந்தனர். அதன் தாக்கமே பாஜகவின் தோல்விக்கு முதல் காரணம் என கூறப்படுகிறது.

கிராமப் புற மக்களிடையே பாஜகவை விட காங்கிரஸ் அதிகம் நெருக்கம் அடைந்துள்ளது. இது தேர்தல் முடிவுகளில் நன்கு எதிரொலித்துள்ளது. பாஜகவினர் கிராமப் புற மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் எதையும் நிறவேற்றவில்லை என்னும் குறை உள்ளதால் அந்த மக்கள் பாஜகவுக்கு தண்டனை அளிக்க காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

விலைவாசி உயர்வும் இந்த தேர்தல் முடிவுகளுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும். கிராமப்புறங்களில் வருமானம் குறைந்துள்ள நிலையில் விலைவாசி உயர்வு அந்த மக்களை பெரிதும் பாதித்துள்ளது. அது மட்டுமின்றி சமூக நலத்திட்டமான இலவச அர்சித் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்புக்களை அரசு அதிகரிக்காதது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. முந்தைய அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை என குறை கூறி ஆட்சியை பிடித்த பாஜக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அக்கறை காட்டவில்லை என மக்கள் நினைக்கின்றனர். அதே நேரத்தில் மோடியின் பகோடா கடையும் ஒரு வேலை வாய்ப்பு என்னும் கருத்துக்களும் இளைஞர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

இந்து வாக்காளர்களிடையே ராமர் கோவில் விவகாரம் மிகவும் விரும்பப்படுகிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்க்ளை மிகவும் கவர்ந்தது ராமர் கோவில் அமைப்பது குறித்த பாஜகவின் வாக்குறுதி ஆகும். ஆனால் கடந்த 4 வருடங்களாக இது குறித்து எதுவும் சொல்லாத பாஜக தற்போது மீண்டும் அதே வாக்குறுதியை அளித்தது இந்து மக்களை சிறிதும் கவரவில்லை.

இவைகளை தவிர உள்ளூர் அரசியல் விவகாரங்களும் பாஜகவின் பின்னடைவுக்கு காரணங்களாக உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அஹு மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில் பாஜக வால் உடனடியாக எந்த ஒரு மாறுதலையும் கொண்டு வர முடியாது என்பதால் இந்த சூழ்நிலை காங்கிரசுக்கு சாதகமாக அமைய மிகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.